பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
43
படையெடுத்துச் சென்றான். அந்தச் சேனாதிபதியின் பெயர் பழையன் என்பது. சோழ நாட்டுக் காவிரிக்கரையில் இருந்த போர் என்னும் ஊரில் பழையன் பரம்பரையார் சோழரின் படைத் தலைவராகப் பரம்பரை பரம்பரையாக இருந்தனர். (அகம் 326: 9 - 12). பழையன் கட்டூரின்மேல் படையெடுத்து வந்தபோது, கொங்குச் சேரனுக்குக் கீழடங்கியிருந்த நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்னும் சிற்றரசர்கள் பழையனுடன் போர் செய்து அவனைப் போர்க்களத்தில் கொன்றுவிட்டனர். இவ்வாறு சோழனுடைய கட்டூர்ப் படையெடுப்பு தோல்வியாக முடிந்தது. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி. பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு, அன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப், பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டென” (அகம் 44: 7 – 11). இதற்குப் பிறகு புன்னாட்டின் வரலாறு தெரியவில்லை.
கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரையில் புன்னாட்டு அரசர் பரம்பரை புன்னாட்டை யரசாண்டு வந்தனர். ஸ்கந்தவர்மன் என்னும் புன்னாட்டு அரசனுக்கு ஆண்மகன் இல்லாதபடியால் அவனுடைய ஒரே மகளைக் கங்க அரசனான அவனிதனுடைய மகனான துர்வினிதன் மணம் செய்து கொண்டான். துர்வினிதன் கி. பி. 482 முதல் 517 வரையில் கங்க நாட்டை யரசாண்டான். புன்னாட்டு அரசனுடைய மகளை மணஞ் செய்து கொண்ட இவன் புன்னாட்டைத் தன்னுடைய கங்க இராச்சியத்தோடு இணைத்துச் சேர்த்துக் கொண்டான் (Mysore from inscriptions by B. Leuies Rice. 1909). புன்னாட்டின் வரலாறு இவ்வாறு முடிவடைகிறது.
எருமையூர் (எருமை நாடு)
எருமையூரையும் அதனை யரசாண்ட எருமையூரனையும் சங்கச் செய்யுள்கள் கூறுகின்றன. இது வட கொங்கு நாட்டின் வட எல்லையில் இருந்தது. “நாரரி நறவின் எருமையூரன்” என்றும் (அகம் 36 :17) “நேராவன்றோள் வடுகர் பெருமகன். பேரிசை எருமை நன்னாடு” என்றும் (அகம் 253 : 18 - 19) கூறுவது காண்க. எருமையூரன் குடநாட்டையும் (குடகு நாட்டை) அரசாண்டான் என்பது “நுண்பூண் எருமை குடநாடு” (அகம் 115: 5) என்பதனால் தெரிகின்றது (எருமை - எருமையூரன்).