உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

165



நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.”

இவ்வாறு பாலை பாடிய பெருங்கடுங்கோவின் செய்யுட்களில் பல உண்மைகளையும் அழகுகளையும் இனிமையையும் கண்டு மகிழலாம். இவர் போர் செய்திருக்கிறார் என்றும் அப்போரில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும் பேய்மகள் இளவெயினியார் இவர்மேல் பாடிய செய்யுளினால் அறிகிறோம்.

பேய்மகள் இளவெயினி

பேய் என்பது இவருடைய பெயர். பேய், பூதம் என்னும் பெயர்கள் சங்க காலத்திலும் அதற்குப் பிறகும் தெய்வங்களின் பெயராக வழங்கி வந்தன. பேயாழ்வார் பூதத்தாழ்வார் என்னும் பெயர்களைக் காண்க. எயினி என்பதனாலே இவர் எயினர் (வேடர்) குலத்துப் பெண்மணி என்று தெரிகிறார். இவர் சிறந்த புலவர். பெரும்புலவரும் அரசருமாக இருந்த பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பாடி இவர் அவரிடம் பரிசு பெற்றார். இவர் பாடிய பாடல் புறநானூறு 11ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செய்யுளில் இவர் பாலை பாடிய பெருங்கடுங்கோவை,

“விண்பொரு புகழ் விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே
வெப்புடைய அரண் கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே”

என்று கூறுகிறார்.

இவரும் பாலை பாடிய பெருங்கடுங்கோவும் கொங்கு நாட்டில் சமகாலத்தில் இருந்தவர்கள் என்பது தெரிகின்றது.

பொன்முடியார்

கொங்கு நாட்டுப் புலவராகிய இவர் சேலம் மாவட்டத்துத் தகடூர் நாட்டைச் சேர்ந்த பொன்முடி என்னும் ஊரினர். இவ்வூர்ப் பெயரே