உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

167


மேற்படி சூத்திரத்தின் ‘அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்’ என்பதன் உரையில் ‘கலையெனப் பாய்ந்த மாவும்’ என்னுஞ் செய்யுளை மேற்கோள் காட்டி “இது சேரமான் (பெருஞ்சேரல் இரும் பொறை) பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன் படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறிய விளக்கம்” என்று கூறியுள்ளார்.

மேற்படி சூத்திரம் ‘உடன்றோர் வருபகை பேணார் ஆர்எயில் உளப்பட’ என்னும் அடிக்கு உரை எழுதியவர் “இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது” என்று விளக்கங் கூறுகிறார்.

பொன்முடியாரின் செய்யுட்கள் இவ்வளவுதான் கிடைத்திருக்கின்றன. இவர் பாடியவை எல்லாம் புறத்துறை பற்றிய செய்யுட்களே.

பெருந்தலைச் சாத்தனார்

இவர்ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனாரென்றும் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனாரென்றுங் கூறப்படுகிறார். இவருடைய பெயர்க் காரணத்தைப் பற்றிப் “பெரிய தலையையுடையராதலிற் பெருந்தலைச் சாத்தனார் எனப்பட்டார் போலும்” என்று பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரவர்கள் நற்றிணை பாடினோர் வரலாற்றில் எழுதுகிறார். இது ஏற்கத்தக்கதன்று. சாத்தனார் என்னும் பெயருள்ள இப்புலவர் பெருந்தலை என்னுமூரில் இருந்தது பற்றிப் பெருந்தலைச்சாத்தனார் என்று பெயர் பெற்றார் என்று கருதுவது பொருத்தமானது. கொங்கு நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோபிசெட்டிப் பாளையம் தாலுகாவில் பெருந்தலையூர் என்னுமூர் இருக்கிறது. இப்புலவர் அவ்வூரினராக இருக்கலாம். பெருந்தலையூர்ச் சாத்தானார் என்பது சுருங்கிப் பெருந்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பட்டது.

அகநானூற்றில் 13, 224ஆம் செய்யுள்கள் இவர் பாடியவை. அகம் 13ஆம் செய்யுளில் ‘தென்னவன் மறவனாகிய கோடைப் பொருநன்’ என்பவனைக் குறிப்பிடுகிறார். இவன் பாண்டியனுடைய சேனைத் தலைவன் என்பதும் கோடைக்கானல் மலைப்பகுதியை இவன் ஆண்டான் என்பதும் தெரிகின்றன. நற்றிணை 262ஆம் செய்யுளும் இவர் பாடியதே. இவர் பாடிய ஆறு செய்யுட்கள் புறநானூற்றில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.