உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

231



“தலையறுத்த மாவிரதம் தரித்தான் தன்னை.”

“பசுபதியைப் பாசுபத வேடத்தானை.”

“பஞ்சவடி1 மார்பினானை.”

என்றும் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் கூறுவது காண்க. மகேந்திரவர்மனும் தான் எழுதிய மத்தவிலாசப் பிரஹசனம் என்னும் நூலிலே, திருவேகம்பத்தில் காபாலிகர், பாசுபதர் இருந்த செய்தியைக் கூறுகிறான். இவற்றினால் அக்காலத்தில் இந்த மதங்கள் இருந்தன என்பது தெரிகிறது.

3.பக்தி இயக்கம்

பௌத்த சமண மதங்கள் பெருகிச் சைவ வைணவ மதங்கள் குன்றியிருந்தபோதிலும் அக்காலத்தில் பக்தியியக்கம் தோன்றி யிருந்தது. பிற்காலத்திலே சைவ வைணவ சமயங்கள் செழித்து வளரவும் பௌத்த சமண மதங்கள் குன்றி மறையவும் காரணமாக இருந்தது இந்தப் பக்தி இயக்கந்தான். சைவ நாயன்மார்களும் வைணவ அடியார்களும் இந்தப் பக்தி இயக்கத்தைப் பரவச் செய்தார்கள். மகேந்திரவர்மன் காலத்தில் சமயப் பூசல்கள் மும்முரமாக நிகழ்ந்தன. சமண சமயம், பௌத்த மதத்தையும் சைவ வைணவ சமயங்களையும் தாக்கிற்று. அவ்வாறே பௌத்த மதம் சமணமதத்தையும் சைவ வைணவ மதங்களையும் தாக்கிற்று. அங்ஙனமே சைவ வைணவ சமயங்கள் சமண சமயத்தையும் பௌத்த மதத்தையும் தாக்கின. நாளடைவில் பக்தி இயக்கம் வெற்றி பெற்றது. சமண பௌத்த மதங்கள் குன்றத் தொடங்கின.

மகேந்திரவர்மன் காலத்தில் பௌத்த மதத்தையும் சமண மதத்தையும் எதிர்த்துச் சைவசமயத்தை ஆதரித்துப் பக்தியைப் பரவச் செய்தவர் திருநாவுக்கரசு நாயனார். இவர் சைவசமயப் பிரசாரம் செய்யத் தொடங்கியது. இவருடைய வயோதிக காலத்தில். முதன் முதலாகச் சைவ சமயப்பிரசாரம் செய்யக்கிளம்பி ஊர்ஊராகச் சுற்றுப் பிரயாணம்செய்து சைவத்தை நிலைநாட்டியவர் இவரே ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாக இவர் தமது முதுமைக்காலத்தில் சமயத்தொண்டு செய்து தமது 81 ஆவது வயதில் சிவகதியடைந்தார்.


[1]

  1. 1. பஞ்சவடி என்பது மாவிரத சமயத்தார் பூணும் மயிர்ப் பூணூால்.