276
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
கூடும் என்று சிலர் கருதுகின்றனர். அரிகேசரி மாறவர்மன், கூன்பாண்டியன், நெடுமாறன், சுந்தரபாண்டியன் என்று கூறுப்படுகிற இவ்வரசனே ஆசாரிய சுந்தரபாண்டியனாக இருக்கக்கூடும் என்று கருதுகிறார்கள்.3
அப்பூதியடிகள்
இவர், சோழநாட்டுத் திங்களூரிலே இருந்த பிராமணர், திருநாவுக்கரசர், நாடெங்கும் தலயாத்திரை செய்து பக்தி இயக்கத்தையும் சைவ சமயத்தையும் பரப்பி வருவதைக் கேள்விப்பட்ட இவர், அவர்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டார். ஆகவே, தமது பிள்ளைகளுக்குத் திருநாவுக்கரசு என்னும் பெயரைச் சூட்டினார். திருநாவுக்கரசர் பெயரால் பல தண்ணீர்ப்பந்தல்களையும் அறச்சாலைகளையும் ஏற்படுத்தினார். திருநாவுக்கரசரை நேரில் காணாமலே இவ்வாறெல்லாம் செய்து சிறந்த சிவனடியாராக விளங்கினார் அப்பூதியடிகள்.
திருநாவுக்கரசர், சோழநாட்டுத் தலயாத்திரை செய்தபோது திங்களூருக்குச் சென்றார். அப்பூதியடிகள் அவரை வரவேற்றுத் தமது மனையில் உபசரித்தார். இவரது விரிவான வரலாற்றைப் பெரியபுராணம், அப்பூதியடிகள் நாயனார் புராணத்தில் காண்க.
முருகநாயனார்
சோழநாட்டுத் திருப்புகலூரில் இருந்தவர். அவ்வூர் வர்த்தமானீச்சுரம் என்னும் சிவன் கோயிலில் வழிபாடு செய்துகொண்டிருந்தார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர் (பரஞ்சோதியார்) இவர்களின் நண்பராக இருந்தார். திருஞான சம்பந்தரின் திருமணத்திற்குச் சென்று, அவர் சோதியில் கலந்தபோது இவரும் சோதியில் கலந்தார். இவருடைய வரலாற்றைப் பெரியபுராணம் முருகநாயனார் புராணத்தில் காண்க.
குங்கிலியக் கலயர்
சோழநாட்டுத் திருக்கடவூரில் இருந்தவர். அவ்வூர்ச் சிவன்கோயில் குங்கிலியத் தூபம் இடுகிற திருத்தொண்டினைச் செய்துவந்தார். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் திருக்கடவூருக்குத் தலயாத்திரையாகச் சென்றபோது அவர்களை வரவேற்று உபசரித்தார். இவருடைய முழுவரலாற்றினைத் திருத்தொண்டர் புராணம் குங்கிலியக் கலநாயனார் புராணத்தில் கண்டுகொள்க.