உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

293


பேயாழ்வாரால் வைணவ பக்தராக்கப்பட்ட பிறகு, இவ்வாறெல்லாம் சிவனையும் சைவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பாடியது சைவருக்கு ஆத்திரம் மூட்டியிருக்கலாம். இதனால் நகரத்தில் சைவ வைணவ கலகங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். கலகத்தை யடக்குவதற்காக, அதற்கு முதுற் காரணராயிருந்த ஆழ்வாரை நாடு கடத்தியிருக்கலாம். இவ்வாறு இவரை நாடு கடத்திய பல்லவ அரசன் மாமல்லனான நரசிம்மவர்மனாகத்தான் இருக்க முடியும். இதனாலும, திருமழிசையாழ்வாரும் மற்ற மூன்று ஆழ்வார்களும் நரசிம்மவர்மன் காலத்தவர் என்பது தெரிகிறது.

IV

இதுகாறும் ஆராய்ந்தவற்றால் பொய்கை பூதம் பேய் திருமழிசை என்னும் ஆழ்வார்கள் நால்வரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டிலே மாமல்லனான நரசிம்மவர்மன் காலத்திலே இருந்தவர்கள் என்பது தெரிகிறது.

திரு. மு. இராகவையங்கார் அவர்கள் இவ்வாழ்வார்கள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் 7ஆம் நூற்றாண்டுவரையில் இருந்தவர்கள் என்று கூறுகிறார்கள்:

"இதுவரை கூறியவற்றால் முதலாழ்வார் மூவரும் திருமழிசையாழ்வாரும் 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை வாழ்ந்த பேரடியார்கள் என்பது... ஒருபடியாகத் தெரியலாம்.3 என்றும்

"முதல் நந்திவர்மன் (கி.பி. 534) சிம்ம விஷ்ணு(கி.பி. 590) போன்ற பரம பாகவதரான அரசர்களதாட்சியில் பூதத்தாழ்வார் போன்றவர் களும், மகேந்திரவர்மனை குணபரனதாட்சியில் திருமழிசையாழ்வாரும் விளங்கியவர்கள் என்ற என் கருத்து எவ்வகையினும் பொருந்து வதாதல் அறிந்து கொள்ளத்தக்கன”1 என்றும் கூறுகிறார்.

இவர் கூறும் காலம் ஏற்கத்தக்கதல்ல. பூதத்தாழ்வார் தமது பாடலில் மாமல்லையைப் பாடியிருப்பதால், அவர் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தவர் என்பதையும் அவருடன் நண்பர்களாக இருந்த மற்ற பேயாழ்வார் பொய்கை யாழ்வார் திருமழிசை யாழ்வார்களும் இவ்வரசன் காலத்தில் இருநதவர்கள் என்பதையும் மேலே விளக்கினோம்.இராகவையங்கார் அவர்கள் தமதுஆராய்ச்சி