296
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
6.தமிழ் இலக்கியம்
நரசிம்மவர்மன் காலத்தில் தமிழ் இலக்கியம் எவ்வாறு இருந்தது என்பதை ஆராய்வோம். அக்காலத்தில் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடினார்கள். அப்பாடல்கள் இசைத் தமிழ் ஆக இருந்தாலும் அவை இயற்றமிழாகவும் விளங்குகின்றன. நாவுக்கரசர் நாற்பத்தொன்பதாயிரம் பதிகங்களைப் பாடினார். “இணைகொள் ஏழெழு நூறு இரும்பனுவல் ஈன்றவன் திருநாவுக்கரையன்” என்று சுந்தரமூர்த்திகள் கூறியுள்ளார். ஞானசம் பந்தர் பதினாறாயிரம் பதிகங்களைப் பாடினார். இவர்கள் பாடிய பாடல்கள் பனையேடுகளில் எழுதப்பட்டுச் சிதம்பரத் திருக்கோயிலிலுள்ள ஓர் அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தன. இவை கையாளப் படாமலும் அவ்வப்போது துப்புரவு செய்யப்படாமலும் இருந்த படியால், நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு அபய குலசேகர சோழ மகா ராசன் இவ்வறைகளைத் திறந்து பார்த்தபொழுது ஏடுகள் கறையான் அரித்து மண்தின்று கிடந்தன. அழியாமல் எஞ்சிநின்றவை, அப்பர் பாடல்கள் முன்னூற்றுப் பன்னிரண்டு பதிகங்களும், ஞானசம்பந்தர் பாடல்கள் முன்னூற்று எண்பத்துநான்கு பதிகங்களும் ஆகும். எனவே அப்பர் சம்பந்தர் பாக்களில் பெரும்பகுதிகள் இப்போது மறைந்து விட்டன.
இவையல்லாமல், பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதி நூறு வெண்பாக்களும், பூதத்தாழ்வார் இயற்றிய இரண்டாந் திருவந்தாதி நூறு வெண்பாக்களும், பேயாழ்வார் இயற்றிய மூன்றாந் திருவந்தாதி நூறு வெண்பாக்களும், திருமழிசையாழ்வார் இயற்றிய நான் முகன் திருவந்தாதி தொண்னூற்றாறு வெண்பாக்களும், திருச்சந்த விருத்தம் நூற்றிருபது விருத்தப் பாக்களும் அக்காலத்தில் இயற்றப் பட்ட தமிழ் இலக்கியங்களாகும். மேலும், கூன்பாண்டியன் என்னும் நெடுமாறன் மீது இயற்றப்பட்ட (இறையனால் அகப்பொருள் உரையில் மேற்கோள் காட்டப்பட்ட) பாண்டிக்கோவையும் அக் காலத்தில் தோன்றிய இலக்கியம் ஆகும்.
தமதுட காலத்தில், செல்வர்கள் புலவர்களை ஆதரித்தார்கள் என்பதை ஞானசம்பந்தர் தமது பாடல்களில் கூறுகிறார்: