பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
333
பெறுவதற்கு முன்பு, வரதவூரர், வரகுண பாண்டியனிடத்தில் தென்வன்பிரமராயன் என்னும் சிறப்புப் பெயருடன் அமைச்சராக இருந்தார் என்று கருதப்படுகிறார். வரகுணபாண்டியன், சோழ நாட்டிலும், பல்வர் நாட்டிலும், இலங்கைத் தீவிலும் படையெடுத்துச்சென்று போர்செய்தான். அதற்காக அவனுக்குக் குதிரைப்படை தேவைப்பட்டது. ஆகவே, பாண்டியன் அவரை ஒறுத்தான் என்று வரலாறு கூறுகிறது. மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சியை இந்நூலில் வேறுஇடத்தில் காண்க.
பாண்டியன் தோல்வி
பல்லவருக்குரியதாக இருந்த சோழநாட்டை வரகுண பாண்டியன் வென்றுகொண்டது, தந்திவர்மன் காலத்திலாகும். தந்திவர்மன் இறந்தபிறகு, அவன் மகன் நந்திவர்மன் பல்லவ இராச்சியத்திற்கு அரசனானான். நந்திவர்மன் காலத்தில் வரகுணபாண்டியன், சோழ நாட்டைக்கடந்து தொண்டை நாட்டிற்கு வந்து, பெண்ணாற்றங்கரையிலிருக்கும் அரசூரில் பாசறை அமைத்துத் தங்கினான் என்று அம்பாசமுத்திர சாசனம் கூறுகிறது.[1] இதனால், இவன் பல்லவ அரசனின் தொண்டை நாட்டையும் கைப்பற்ற முயற்சிசெய்தான் என்பது தெரிகிறது. வரகுண பாண்டியன் காஞ்சீபுரத்தின்மேல் படையெடுத்து வந்தான். நந்திவர்மன், வரகுண பாண்டியனைக் காஞ்சீபுரத்துக்குத் தெற்கே 35 மைல் தூரத்தில் உள்ள தெள்ளாறு என்னும் ஊரில் எதிர்த்துப் போர்செய்தான்.[2] போர்செய்து வென்றான். போரில் பின்னடைந்து சென்ற பாண்டியனைத் தொடர்ந்து சென்று வெள்ளாறு நள்ளாறு முதலிய இடங்களில் போர் செய்து வென்று, முன்பு பாண்டியன் பிடித்துக்கொண்ட சோழநாட்டை மீட்டுக் கொண்டான். தெள்ளாற்றுப்போர் மிக முக்கியமானது. அதை வென்றபடியால், நந்திவர்மனுக்குத் “தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்” என்னும் சிறப்புப் பெயர்ஏற்பட்டது. தெள்ளாற்றுப் போர், நந்திவர்மனுடைய பத்தாவது ஆண்டில், அதாவது கி. பி. 840 நடந்ததென்று கருதப்படுகிறது.
நந்திவர்மன் பாண்டியனை வென்றபிறகு, பாண்டியன் மகளைத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. அடிகள் மாறன் பாவை என்பது அவ்வரச குமாரியின் பெயர். ‘பல்லவர் குல திலக நந்திவர்மன் மனைவி அடிகள் மாறன் பாவையார்’ என்று சாசனம் கூறுகிறது.[3] இந்த மாறன் பாவையார்' என்று மாறனுடைய மகளும், வரகுண பாண்டியனின் பேர்த்தியுமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.