உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

450

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


உடன்படாமல் மறுத்துவிட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது. பிறகு முருகன், அவ்வழியாகச் சென்ற சிங்களவரை விளித்துத் தன்னைக் கொண்டுபோய்க் கீழே விடும்படி கேட்டுக்கொள்ள அதற்கு அவர்கள் உடன்பட்டுக் குன்றின்மேல் இருந்த முருகனைக் கீழே கொண்டுவந்து விட்டனர் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கதையிலிருந்து ஒரு உண்மை புலனாகிறது. குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகன் மலைமேல் ழுந்தருளி இருக்க வேண்டியவன். ஆகவே அவனைக் குன்றிலிருந்து கீழே கொண்டுவரத் தமிழர்கள் மறுத்துவிட்டனர். ஆனால், தமிழர் மரபு அறியாத சிங்களவர் முருகனைக் குன்றிலிருந்து கீழே கொண்டு வந்துவிட்டார்கள். பிறகு, முருகன் இருந்த அந்த இடத்தில் சிங்களவர் ஒரு பௌத்தத் தகோபாவை (தாதுகர்ப்பத்தைக்) கட்டிவிட்டனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்த துட்டகமுனு என்னும் சிங்கள அரசன், தன் பகைவனாகிய ஏலேலனைப் போரில் வெல்வதற்குக் கதிர்காமத் தெய்வத்தின் அருளைப் பெற்றான் என்றும் அதற்காக அவன் கதிர்காமக் கோவிலுக்குத் தானங்களைக் கொடுத்தான் என்றும், மகாவம்சம் என்னும் நூலில் கூறப்படுகிறான். கதிர் காமத்தில் மட்டுமல்ல; இலங்கையின் ஊவா மாகாணம், வடமத்திய மாகாணம், வடமேற்கு மாகாண, கண்டி முதலிய இடங்களிலும் கலெதெவியோ (Gale Deviyo) என்னும் மலைத் தெய்வமாகிய கந்தன் வழிபடப்படுகிறான். ஆண்டுதோறும் வேடர் (சிங்களவருங்கூட) மலையுச்சிகளில் உள்ள பாறைகளில் கந்தனுக்கு வெறியாடுகிறார்கள். இது, தமிழ் நாட்டில் சங்க காலத்தில், நடந்துவந்த வேலன் வெறியாடலை நினைவுறுத்துகிறது. குருநாக்கல் காட்டில் உள்ள ரிட்டிகலா, ரணகிரியா முதலிய மலைகளில் கந்தன் வணக்கம் இன்றும் சிங்களவர்களால் நடைபெறுகிறது இலங்கைக் காடுகளில் வாழும் வேடர்கள் வணங்கும் பல தெய்வங்களில் ஸ்கந்தனாகிய கல் யக்கனும் (மலை இயக்கன்) ஒன்று.

கண்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘பிரஹா’ என்னும் உற்சவத்தில் ஸ்கந்தனுக்கு முதலிடம் தரப்பட்டிருந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த முதலிடம் புத்தருடைய பல் ஊர்வலத்துக்குத் தரப்பட்டது. ஆனால், பண்டைக்காலம் போலவே இன்றும் இலங்கையில் பௌத்தர்களால் முருகன் (ஸ்கந்தன்) வணக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.