உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/உதவியும் யோசனையும்

விக்கிமூலம் இலிருந்து

ஊரின் அருகே அழகாக
உள்ள ஆற்றங் கரைவழியே

சென்றார் ஒருவர். அப்பொழுது
செவிகளில் வீழ்ந்தது குரலொன்று.

“ஐயோ! அப்பா!” எனும் சத்தம்
ஆற்றின் நடுவே கேட்டிடவே,

சத்தம் வந்த திசைதனிலே
‘சட்’டெனப் பார்த்தார் அம்மனிதர்.

பையன் ஒருவன் தண்ணீரில்
பரிதவிப் பதையே கண்டனரே.

கண்டதும் அவனை உடனேயே
காத்திடும் வழியைத் தேடாமல்,

“ஏண்டா, முட்டாள் பயலேநீ
இதனில் இறங்கிட லாமோடா?

எத்தனை பேர்கள் இதில் இறங்கி
இறந்தனர்! நீயும் அறியாயோ?

எனது புத்தி மதிகளை நீ
என்றும் கேட்டு நடந்திடுவாய்

அவையே உனக்கு எப்பொழுதும்
அதிகத் துணையாய் நிற்குமடா”


என்றே அவரும் கூறுகையில்
ஏங்கித் தவித்த அப்பையன்,

“ஐயா, உயிரோ போகிறதே!
அடியேன் பிழைத்திட இப்பொழுதே

உதவி செய்தால் பலனுண்டு.
யோசனை அப்புறம் கூறிடலாம்.

ஐயோ! உதவி உதவி!” என
அலறினன். உடனே அம்மனிதர்

உணர்ந்தனர் பையன் நிலைமைதனை;
உடனே ஆற்றில் பாய்ந்தனரே !

பாய்ந்தே அவனைக் கரைதனிலே
பத்திர மாகச் சேர்த்தனரே !

சிறுவன் பிழைத்தான், அவருடைய
சிறந்த உதவி பெற்றதனால்.

உதவி எதுவும் செய்யாமல்
யோசனை சொல்வதில் பலனுண்டோ ?

‘இல்லை, இல்லை’ என்றேதான்
இக்கதை மூலம் உணர்கின்றோம்.