பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
451
திருமால்
இலங்கையில் திருமால் வணக்கமும் மிகப் பழைய காலத்திலிருந்து நிகழ்ந்து வருகிறது. திருமால், இலங்கைத் தீவில் விஷ்ணு என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார். சிங்கள மொழியில் திருமாலாகிய விஷ்ணுவை மாவிஸ் உன்னானெ என்று கூறுவர். இது மஹாவிஷ்ணு என்பதன் சிதைவாக இருக்கலாம். இலங்கையிலே கதிர்காமத் தெய்வம் என்றும் கலெதெய்யோ என்றும் கூறப்படுகிற ஸ்கந்தனுக்குத் தனியாகக் கோயில்கள் உண்டு. கந்தனை பௌத்தக் கோவிலுக்குள் வைத்துப் பூசிப்பது இல்லை. ஆனால் விஷ்ணுவை பௌத்தக் கோயில்களிலும் வைத்துப் பூசிக்கிறார்கள். கருடவாகனம் உடையவராக, சங்கு சக்கரம் ஏந்தியவராகத் திருமாலைச் சிங்களவர் இன்றும் வழிபடுகிறார்கள்.
இலங்கையில் தம்புல்ல என்னும் ஊர் உண்டு. இது கண்டியிலிருந்து 18-மைல் தூரத்திலுள்ள மாத்தளை என்னும் ஊரிலிருந்து வடக்கே 28-மைல் தூரத்தில் இருக்கிறது. இவ்வூருக்கு அருகிலே பாறைக்கல்லால் அமைந்த மலையொன்று உண்டு. 500 அடி உயரமுள்ள இந்த மலைமேலே இயற்கையாக அமைந்த ஐந்து குகைக் கோவில்கள் இருக்கின்றன. இக்குகைக் கோவில்களில் புத்தர் பெருமானுடைய உருவங்கள் வழிபடப்படுகின்றன.
இக்குகைகளில் முதலாவது குகைபெரியது. இதில் புத்தர் பெருமான் பள்ளிகொண்டிருப்பது போன்ற உருவம் கற்பாறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் நீளம் 42-அடி. இவ்வுருவத்தின் தலைப்பக்கத்தில் விஷ்ணு (திருமால்)லின் உருவம் நின்ற கோலமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இது மரத்தினால் செய்யப்பட்ட உருவம். இந்த விஷ்ணுவின் பெயரினாலே இந்தக் குகை தேவராஜவிகாரை என்று பெயர் பெற்றிருக்கிறது. தேவராஜன் என்பது விஷ்ணுவின் பெயர்.
இதற்கு அடுத்த இரண்டாவது குகையிலும் புத்தர் உருவமும் வேறு சில பௌத்தத் தெய்வங்களின் உருவங்களும் காணப்படுகின்றன. பாறையில் வர்ணத்தினால் எழுதப்பட்ட தெய்வ உருவங்களும் காணப்படுகின்றன வர்ணத் திருவுருவங்களில் விஷ்ணுவின் திருவுருவமும் ஒன்றாக அமைந்திருக்கிறது.