506
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
இலுபாதஹி தமேட ஸமணெ கரிதெ தமட ககபதிகன பஸதெ
ஸக்ஸ அஸநெ நஸதஸ அஸநெ கஃதிஸஹ அஸனெ
... அஸநெ குபிர ஸுஜதஹு நவிக காரவ்வஹ அஸநே16
இதன் பொருள்:
இலுபாதத்தில் வாழும் ஸமண என்னும் தமிழன் செய்வித்த தமிழக் குடும்பிகளின் மாளிக ஸக என்பவரின் இருக்கை, நஸதரின் இருக்கை, சுஃதிஸ்ஸரின் இருக்கை... உடைய இருக்கை, குபிர ஸுஜதகரின் இருக்கை, நாவிகராகிய காரவ்வரின் இருக்கை.
குடும்பிகள் என்பது வாணிகரைக் குறிக்கிறது. ஆசனம் (இருக்கை) என்பது அவரவர் அமர்ந்திருந்த இடத்தைக் குறிக்கிறது. நாவிகன் என்பது கப்பல் தலைவன். நாவிகராகிய காரவ்வரின் பெயர் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. அவர் கடல்கடந்த நாடுகளுடன் கப்பலில் வாணிகஞ் செய்தவர். இந்த வாணிகச் சாத்து இலங்கையில் பௌத்த மதம் வருவதற்கு முன்பு அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
இலங்கையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாணிகம் செய்தவரின் பெயர் இன்னொரு கல்வெட்டெழுத்தில் கூறப்படுகிறது. இலங்கையில் வாவுண்ணி மாவட்டத்தில் பெரிய புளியங்குளம் என்னும் இடத்தில் உள்ள ஒரு மலைக்குகையில் இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டு விசாகன் என்னும் தமிழ் வாணிகன் பெயரைக் கூறுகிறது. அதன் வாசகம் இது:
தமெட வயிஜ க(ப)தி விஸகஹ விணே
தமெட வணிஜ கபதி விஸ்கணுஹ ஸேணி மென17
இதன் பொருள்:
தமிழ் வாணிகக் குடும்பிகள் விஸாகனுடைய (செய்வித்த) குகை
தமிழ் வாணிகக் குடும்பிகன் விஸாகன் செய்வித்த படிகள்.
இப்போது பெரிய புளியங்குளம் என்னும் பெயர்பெற்றுள்ள இடத்தில் உள்ள மலைக்குகையில், தமிழ் வாணிகக் குடும்பிகனான விஸாகன் என்பவர் பௌத்த முனிவர்கள் தங்கியிருப்பதற்காக (அக்காலத்தில் (கி.மு. 2ஆம் நூற்றாண்டில்) அமைத்துக்கொடுத்த குகையைப்பற்றி இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்துக் கூறுகிறது.