உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/கோழி கண்ட வைரம்

விக்கிமூலம் இலிருந்து

கோழி ஒன்று ‘குடுகு’டென்று
ஓடி வந்ததாம்—வந்து
குப்பை மேட்டில் ஏறிக் கிளறிக்
கிளறிப் பார்த்ததாம்.

தின்ன ஏதும் தானி யந்தான்
அங்கே இல்லையாம்—பசி
தீர்த்துக் கொள்ள வழியில் லாமல்
ஏங்கி நின்றதாம்.

அந்தச் சமயம் தரையில் ஏதோ
பளப ளத்ததாம்—மிக்க
ஆவ லாக அருகிற் சென்று
கூர்ந்து பார்த்ததாம்.

கண்ணைக் கவரும் வைரம் ஒன்றைத்
தரையில் கண்டதாம்—உடன்
கலக்கத் தோடு அதனைப் பார்த்துக்
கோழி சொன்னதாம்


“மதிப்பு மிகவும் உயர்ந்த தென்று
மனிதர் கூறிடும்—நல்ல .
வைர மேநான் உன்னை வைத்து
என்ன செய்குவேன்?

நெல்லில் ஒன்றே இந்த நேரம்
எனக்குக் கிடைப்பினும்—நான்
நிகரி லாத மகிழ்ச்சி யோடு
கொத்தித் தின்னுவேன்.

பாரில் உள்ள வைரம் யாவும்
ஒன்று சேரினும்—என்
பசியைத் தீர்த்து வைக்கும் சக்தி
இல்லை; இல்லையே!”