48
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
தமிழ்நாட்டை யரசாண்ட களப்பிர அரசர் ஆட்சிக் காலத்தில் இரேணாட்டை யாண்ட சோழர்களைப் பற்றி மட்டும் இங்குக் கூறுவோம்.
இரேணாட்டை யரசாண்ட சோழர் அங்கு நிலைத்து நெடுங்காலம் அரசாண்டபோதிலும் அவர்கள் முழுச் சுதந்தரராக இருக்கவில்லை. தங்களைவிடப் பேரரசரின் துணையை நாடி வாழ வேண்டியவராக இருந்தனர். முதலில் அவர்கள் தொண்டை நாட்டை யரசாண்ட பல்லவ மன்னர்களுக்கு அடங்கியிருந்தனர். அவர்கள் தங்களுக்கு, அக் காலத்துப் பல்லவ மன்னர்கள் பெயரைச் சூட்டிக் கொண்டதிலிருந்து இதனை அறிகிறோம். பிறகு, மேலைச் சளுக்கியர் வலிமை பெற்று ஓங்கினபோது இவர்கள் சளுக்கிய மன்னரைச் சார்ந்து வாழ்ந்தனர்.
களப்பிரரின் ஆட்சிக் காலத்தில் இரேணாட்டை யாண்ட தெலுங்குச் சோழர்களின் பெயரையும் அவர்கள் சூட்டிக் கொண்டிருந்த பல்லவ அரசர் பெயர்களையும் கீழே தருகிறோம் (பக்கம் 270). அவர்கள் ஆண்ட காலத்தையும் உத்தேசமாகத் தருகிறோம்.
இந்தச் சோழருடைய காலங்களைத் திரு. எம். இராமராவ் அவர்களின் ஆந்திர தேசத்தின் பழைய வரலாற்று ஆய்வுகள் என்னும் நூலிலிருந்து (பக்கம் 148, 149) எடுத்துள்ளோம் (Studies in the Early History of Andhradesa, M. Rama Rao, pp. 148, 149).
மற்ற இரேணாட்டுச் சோழர்களைப் பற்றி இங்குக் கூறவில்லை. இங்குக் கூறப்பட்ட முதல் ஆறு அரசர்கள் பல்லவ அரசர்களைச் சார்ந்து இருந்ததை அறிகிறோம். கி. பி. 5ஆம் நூற்றாண்டின் கடைசியில் இருந்த ஒரு சோழன் இரேணாட்டில் சோழ இராச்சியத்தை நிறுவினான். இவன், முதலாம் நந்திவர்மன் என்னும் பல்லவனுடைய சமகாலத்தில் இருந்தவன். இவன் தன்னுடைய மகனுக்குப் பல்லவ நந்திவர்மனுடைய பெயரைச் சூட்டினான். நந்திவர்ம சோழன், சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசனுடைய சமகாலத்தில் இருந்தவன். இவன் தன்னுடைய மூத்த மகனுக்குச் சிம்மவிஷ்ணுப் பல்லவனுடைய பெயரைச் சூட்டினான். நந்திவர்ம சோழனுடைய முதலாம், இரண்டாம், மூன்றாம் மகன்களான சிம்ம விஷ்ணுவும் சுந்தசனந்தனும் தனஞ்சயனும் பல்லவ சிம்மவிஷ்ணு காலத்தில் இருந்தவர்கள் என்பதை அறிகிறோம். சோழன் தனஞ்சயவர்மனின் ஆட்சிக் காலத்தில் பல்லவ சிம்மவிஷ்ணு, காவிரி பாய்கிற சோழநாட்டை யரசாண்ட களப்பிரனோடு போர்செய்து வென்று சோழநாட்டைக் கைப்பற்றி அதனைத் தன்னுடைய பல்லவ