களப்பிரர் காலத்து இலங்கை அரசர்
களப்பிரர் தமிழகத்தை ஆண்ட காலத்தில் பக்கத்து நாடாகிய இலங்கையின் அரசியல் நிலை எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம். இலங்கையிலும் நிலைத்த ஆட்சி யில்லாமல் அரசியல் குழப்பங்களும் கலகங்களும் இருந்தன.
தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் நெடுங்காலமாக அரசியல் தொடர்பும் வாணிகத் தொடர்பும் சமயத் தொடர்பும் இருந்து வந்தன. ஏறத்தாழ கி. மு. 5ஆம் நூற்றாண்டிலிருந்து, இலங்கை - தமிழ்நாடு உறவு இருந்தது. களப்பிரர் காலத்திலும் இரு நாடுகளுக்கும் தொடர்பு இருந்தது. அந்தத் தொடர்பைச் சுருக்கமாகக் கூறுவோம். களப்பிர அரசர்களைப் பற்றின வரலாற்றுச் செய்திகள் வரன்முறையாகத் தெரியவில்லை யானாலும் அக்காலத்து இலங்கையரசருடைய வரலாறு வரன்முறையாவும் தொடர்ச்சியாகவும் தெரிகின்றது. சூலவம்சம் என்னும் நூலிலே இலங்கை வரலாறு தெரிகின்றது. பாண்டிய நாட்டைக் களப்பிர அரசர் ஆண்ட காலத்திலே பாண்டிய அரச குலத்தார் இலங்கையைக் கைப்பற்றிச் சிலகாலம் அரசாண்ட செய்தியை இலங்கை வரலாற்றிலிருந்து அறிகிறோம். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இலங்கையை யரசாண்ட அரசர்களைக் கூறுவோம். இந்த அரசர்கள் ஆண்ட காலத்தை இலங்கை வரலாற்றுச் சுருக்கம் என்னும் நூலிலிருந்து எடுத்துள்ளோம். (A Short History of Ceylon, H. W. Codringtion, 1929).
திஸ்ஸன்
திஸ்ஸன் என்னும் இவன் ஸ்ரீதாசனுடைய மகன். இவன் விவகாரம் (சட்டம்) அறிந்தவனாகையால் ஓகாரிக திஸ்ஸன் என்று பெயர் பெற்றான். இவன் இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் இலங்கையில் மகாயான பௌத்த மதம் நுழையத் தொடங்கிற்று. இலங்கையில் பழைய தேரவாதப் பௌத்தத்துக்கு மாறானது மகாயான பௌத்த மதம். தேரவாதப் பௌத்தத்துக்கு இடையூறாக இருந்த மகாயான பௌத்தம் இலங்கை யில் நுழைந்தபோது, ஓகாரிக திஸ்ஸன் தன்னுடைய அமைச்சனான-