உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

58

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


அரசாளும் ஊழ் இருக்கிறது என்று நம்பிய அந்தப் பிக்கு அவனுக்கு மதக்கல்வியைப் போதிக்காமல் அரசியல் நூல்களைக் கற்பித்துக் கொண்டிருந்தான்.

தனக்கு எதிராகப் பௌத்த விகாரையில் தாதுசேனன் மறைவாக இருக்கிறான் என்பதையறிந்த பாண்டியன் அவனைப் பிடித்துக் கொண்டுவரும்படி தன்னுடைய வீரர்களை அனுப்பினான். பிடிக்க வருகிறார்கள் என்பதை முன்னமேயறிந்த தாதுசேனனும் அவனுடைய மாமனான பிக்குவும் நகரத்தை விட்டுப் புறப்பட்டுத் தெற்கு எல்லையான மாவலிகங்கையைக் கடந்து தெற்கே போய்விட்டார்கள். அவர்கள் தெற்கு சென்று கோணஓயாவைப் (இபோதைய காளஓயா) கடந்து உரோகண நாட்டுக்குப் போய்விட்டார்கள். அவர்கள் உரோகண நாட்டில் கலகக்காரர்களோடு சேர்ந்துகொண்டு அரசனுக்கு எதிராகக் கலகஞ்செய்யும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாண்டியன் இலங்கை இராச்சியத்தை ஐந்து ஆண்டுகள் அரசாண்ட பிறகு காலமானான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 11 – 29).

பரிந்தன் (கி. பி. 441 - 444)

பாண்டியன் காலமான பிறகு அவனுடைய மூத்த மகனான பரிந்தன் இலங்கையை யரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்து வரலாறு தெரியவில்லை. இவனுடைய ஆட்சிக் காலத்தில் உரோகண நாட்டிலிருந்த தாதுசேனன் கலகக்காரர் களைச் சேர்த்துக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்தான் என்று தோன்றுகிறது. பாண்டியன் பரிந்தன் மூன்று ஆண்டுகள் அரசாண்டான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 29).

இளம்பரிந்தன் (குட்டபரிந்தன், கி. பி. 444 - 460)

பாண்டியன் பரிந்தன் காலமான பிறகு அவனுடைய தம்பியான இளம்பரிந்தன் அரசாண்டான். இவனைக் குட்டபரிந்தன் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. குட்டபரிந்தன் என்றால் இளம்பரிந்தன் என்பது பொருள். அதாவது பரிந்தனுடைய தம்பி என்பது பொருள். இவன் பதினாறு ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில், கலகக்காரனான தாதுசேனன் படை திரட்டிக் கொண்டு வந்து இவனோடு போர் செய்தான். குட்டபரிந்தன் அவனோடு போர் செய்து வென்றான். தோற்றுப் போன தாதுசேனன் போர்க்களத்தைவிட்டு