62
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
யெல்லாம் துன்புறுத்தி அடக்கினான். அரசாட்சிக்கு உரிமையுள்ளவனான மொக்கல்லானனை விஷம் இட்டுக் கொல்ல முயன்றான். மொக்கல்லானன் உயிர் தப்பித் தமிழ்நாட்டுக்கு ஓடி அடைக்கலம் புகுந்தான். அவன் தமிழ்நாட்டிலிருந்து சேனையைச் சேர்த்துக்கொண்டு வந்து கஸ்ஸபன் மேல் போர்செய்து ஆட்சியைப் பெறுவதற்காகத் தமிழ்நாட்டுக்குப் போனான். போனவன் களப்பிர அரசரின் ஆதரவைப்பெற அவர்களிடம் சென்றான் போலும். சிறைச்சாலையில் தாதுசேன அரசனுக்குச் சரியாக உணவும் கிடைக்கவில்லை. தன்னுடைய மகனான மொக்கல்லானன் தமிழ்நாட்டுக்குப் போய் விட்டதையறிந்து அவன் மனக்கவலையும் துன்பமும் அடைந்தான். பழிக்குப்பழி வாங்கத் திட்டமிட்ட சேனாபதியான உபதிஸ்ஸன் தன்னுடைய திட்டத்தில் வெற்றியடைந்தான். ஆனால், சேனாபதி இதோடு நிற்கவில்லை. அரசனைச் சித்திரவதை செய்து கொல்லத் திட்டமிட்டான்.
அவன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள கஸ்ஸபனிடஞ் சென்று, 'உம்முடைய தந்தை தாதுசேன மன்னன் அரண்மனையில் இரகசியமாகப் பெருஞ்செல்வத்தை வைத்திருக்கிறாரே, அது பற்றி அவர் உம்மிடம் ஒன்றும் சொல்லவில்லையா?' என்று கேட்டான். கஸ்ஸபன் 'ஒன்றுஞ் சொல்லவில்லை' என்று கூறினான். அதற்குச் சோனபதி 'அவருடைய உள்நோக்கம் உமக்குத் தெரியவில்லையா? அவர் தம்முடைய செல்வமகனான மொக்கல்லானனுக்குக் கொடுக்க அதை வைத்திருக்கிறார்' என்று கூறினான். சேனாபதி கூறியதை உண்மை என்று நம்பிய கஸ்ஸபன், பொருளாசை கொண்டவனாகித் தன்னுடைய ஆட்களைச் சிறைச்சாலையிலுள்ள தாதுசேனனிடம் அனுப்பி அவர் பொருள் வைத்திருக்கும் இடத்தையறிந்து வரும்படி சொன்னான். அவர்கள் சென்று கேட்டபோது அரசன் 'இந்தக் கொடியவன் என்னைக் கொன்றுவிடுவதற்குச் செய்யும் சூழ்ச்சி இது' என்று எண்ணி, பதில் ஒன்றும் பேசாமலிருந்ததைக் கூறினார்கள். கஸ்ஸபன் பலமுறை தன்னுடைய ஆட்களை அனுப்பிக்கேட்டான். கடைசியாக வந்து கேட்டபோது, காலவாபிவரியில் என்னை நீராட அழைத்துக் கொண்டு போனால் அங்குச்சென்று அந்த இடத்தைக் காட்டுவேன் என்று கூறினான். ஆட்கள் வந்து அரசன் கூறியதைச் சொன்னார்கள். கஸ்ஸபன், தாதுசேனனை காலவபியில் நீராட அனுமதி கொடுத்தான். தாதுசேனன் காலவபியில் நீராடின பிறகு, அரசனுடைய ஆட்களிடம் ஏரியைக் காட்டி, ‘இதுதான் நான் பொருள் வைத்துள்ள இடம்' என்று-