உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

102

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


பல்காயம்


பல்காயனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றினார். இந்நூல் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. இந்நூலிலிருந்து சில நூற்பாக்கள் உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன (மறைந்து போன தமிழ் நூல்கள்).

இலக்கிய நூல்கள் (சமணர் இயற்றியவை)

களப்பிரர் ஆட்சிக் காலத்தில், கி.பி. 250 முதல் 575 வரையில் என்னென்ன தமிழ் இலக்கிய நூல்கள் உண்டாயின என்பதற்கு முழு விவரங்கள் கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் புது வகையான பாவினங்கள் தோன்றின என்பதை அறிந்தோம். புதிய பாக்களினாலே புதிய தமிழ் நூல்கள் பல தோன்றியிருக்க வேண்டும் என்பது உறுதி. நமக்குத் தெரிகிற வரையில் அக்காலத்தில் தோன்றின தமிழ் இலக்கிய நூல்களைக் கூறுவோம்.

நரிவிருத்தம்

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசு சுவாமிகள் தம்முடைய தேவாரப் பதிகத்தில் நரிவிருத்தம் என்னும் நூலைக் கூறுகிறார்.

எரிபெருக்குவர் அவ்வெரி ஈசனது
உருவருக்க மாவது உணர்கிலர்
அரி அயற்கு அரியானை அயர்த்துபோய்
நரிவிருத்தம் தாகுவர் நாடரே

(நாவுக்கரசர் தேவாரம், ஆதிபுராணத் திருக்குறுந்தொகை 7)

நரி விருத்தம் என்பதன் பொருள் நரியின் வரலாறு என்பது (விருத்தம்- விருத்தாந்தம், வரலாறு). விருத்தம் என்பதற்கு விருத்தப் பாவாலான நூல் என்றும் கூறலாம். இந்நூலாசிரியர் திருத்தக்கதேவர் என்று பெயர்பெற்ற புலவர். சோழ அரசர் குலத்தில் பிறந்தவரான திருத்தக்கதேவர் சமண சமயத்துத் துறவியாகிச் சமண சமயத்துத் தேவ கணத்தைச் சேர்ந்திருந்தார். இவர் சீவகன் என்னும் அரசனுடைய வரலாற்றைச் சீவகசிந்தாமணி என்னும் பெயரினால் பாட எண்ணித் தம்முடைய சமய குருவின் அனுமதியைக் கோரினார். சீவகன் சரிதையில் சிற்றின்பச் செய்திகளும் உலகியல் செய்திகளும் அதிகமாக இருப்பதால் அதை எழுத முன்வந்த திருத்தக்கதேவர் தம்முடைய துறவுநிலையில் உறுதியுள்ளவராக இருக்கிறாரா என்பதை அறிய விரும்பின குரு.