உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

148

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


(நற்றிணை 131). ஊனைத் தின்ற எச்சிற்கையில் உள்ள இறைச்சியின் கொழுப்பை வீட்டுச் சுவரில் தேய்த்துவிட்டுப் போர்க்கூத்துக்குச் சென்ற வீரனையும். அவன் திரும்பிவந்து குடிப்பதற்காக வைத்துள்ள கட்சாடியையும் பாடுகிறார் (புறம் 258). மற்றும் இவர் பாடியுள்ள காதற் செய்திப் பாட்டுக்கள் பல உள்ளன. சைனத் துறவிக்கு விலக்கப் பட்டவை களையெல்லாம் பாடுகிற உலோச்சனாரை வையாபுரிப் பிள்ளை, வச்சிரநந்தியின் சைனத் துறவிகளின் சங்கத்தில் இருந்தவர் என்று கூறுகிறார். இவர் கூற்று நம்பத்தக்கதா? இதை ஒப்புக்கொள்ள முடியுமா? களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வச்சிரநந்தியின் சைன முனிவர் சங்கத்தில் இருந்தவர் என்று வையாபுரிப்பிள்ளை கூறுகிற உலோச்சனார், களப்பிரர் காலத்துக்குச் சில நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்திருந்த சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாடுகிறார் (புறம் 377). கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வச்சிர நந்தியின் சங்கத்தில் உலோச்சனார் இருந்தவர் என்றால், அவருடைய செய்யுட்கள் கடைச்சங்க காலத்துத் தொகை நூல்களில் எப்படி இடம் பெற்றிருக்கக்கூடும்?

மாதீர்த்தன் என்னும் கடைச்சங்கப் புலவரையும் வையாபுரியார் வச்சிரநந்தியின் தமிழ்ச் சைன சங்கத்தவர் என்று கூறுகிறார். மாதீர்த்தனார் குறுந்தொகை 113ஆம் செய்யுளைப் பாடியவர். இந்தப் பாட்டு அகப்பொருளைப் பற்றிய காதற்பாட்டு. இந்தக் காதற்பாட்டைப் பாடிய மாதீர்த்தனார் வச்சிரநந்தி சங்கத்தைச் சேர்ந்த சைன முனிவராக இருக்க முடியுமா? இவற்றையெல்லாம் கருதாமல், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை இவர்களைச் சைன முனிவர்களின் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்! பகுத்தறிவு உள்ளவர் இவர் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியுமா?

புறம் 175ஆம் செய்யுளிலும் அகம் 59ஆம் செய்யுளிலும் அகம் 193ஆம் செய்யுளிலும் சைனரின் மதக் கொள்கைகள் கூறப்படுகின்றன. என்றும் ஆகவே அந்தச் செய்யுட்களைப் பாடிய புலவர்கள் வச்சிர நந்தியின் சைனத் தமிழச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் என்றும் வையா புரியார் குறிப்பாகக் கூறுகிறார். 'புறம் 175ஆம் பாட்டிலும் அகம் 59ஆம் பாட்டிலும் மறுபிறப்புப் பற்றியும் ஒரு புராணக்கதையைப் பற்றியும் அகம் 193இல் சைனருடைய சமயக்கொள்கை பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. தமிழ்மொழி தமிழ்இலக்கிய வளர்ச்சியைப் பற்றின பழைய சைன நிறுவனத்தைப் பற்றி நாம் கேள்விப்