உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

198

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


என்பது முதல் காரணம். அந்தக் கடல்தீவு துளு நாட்டுக்கு அருகில் இருந்தபடியால் துளு நாட்டு அரசரின் ஆதிக்கத்தில் அது இருந்திருக்க வேண்டும் என்பது இரண்டாவது காரணம்.

எனவே, துளு நாட்டு நன்னனின் ஆதிக்கத்திலிருந்த கடல்தீவுக் குறும்பர், நன்னனுடைய ஏவுதலின்மேல், யவனக் கப்பல்கள் சேர நாட்டுத் துறைமுகங்களுக்குப் போகாதபடி குறும்பு செய்திருக்க வேண்டும், இக்காரணம் பற்றித்தான் சேர மன்னர் கடல் தீவுப் போரைச் செய்தது பற்றி இங்குக் கூறவேண்டியதாயிற்று.

முதலாம் நன்னனுடைய வரலாறு முழுமையும் தெரியவில்லை. ஆனால், அவனுக்கும் சேரஅரசருக்கும் பரம்பரையாகப் பகைமை இருந்தது என்பது தெரிகிறது. இவன், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனின் சமகாலத்தவனாதலால், அவன் இருந்த காலமாகிய கி.பி. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் இருந்தவனாதல் வேண்டும். அதாவது உத்தேசமாகக் கி.பி 100 முதல் 125 வரையில் முதலாம் நன்னன் இருந்தான் என்று கொள்ளலாம்.

இரண்டாம் நன்னன் (ஏறத்தாழ கி.பி. 125-150)

முதலாம் நன்னனுக்குப் பிறகு அவன் மகனான நன்னன் இராண்டாமவன் துளு நாட்டை யரசாண்டான். இவன் துளு இராச்சியத்தில் எல்லையை விரிவுபடுத்த முயன்றான். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியையுங் கண்டான். சேர இராச்சியத்தின் வடக்கிலிருந்த சேரருக்கு உரிய பூழிநாட்டை வென்று அதைத் தன் துளு நாட்டுடன் சேர்த்துக்கொண்டான். மேலும், இவனுடைய துளு நாட்டுக்குக் கிழக்கே இருந்த கொங்கு நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றவும் முயற்சி செய்தான்.

இவனுடைய சேனைத் தலைவன் மிஞிலி என்பவன். மிஞிலி சிறந்த போர் வீரன். இவன் பாரம் என்னும் ஊரில் இருந்தான்.

முதலாம் நன்னன் காலத்துக்கு முன்பிருந்தே சேர அரசர் தென்கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றித் தங்கள் சேர இராச்சியத்தோடு சேர்த்துக்கொண்டனர். அக்காலத்தில் கொங்கு நாட்டைச் சிறுசிறு குறுநில மன்னர் ஆண்டனர். சேர, சோழ, பாண்டிய நாடுகளில் பேரரசர் இருந்தது போலக் கொங்கு நாட்டில் பேரரசன் இல்லை. சிற்றரசர்கள் ஆட்சி செய்த கொங்கு நாட்டைச் சேர அரசரும் துளு நாட்டு அரசரும்