பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு
221
நாட்டில் வழங்கிய கன்னட எழுத்தையே துளு மொழிக்கும் வழங்கினார்கள்.
துளு நாட்டின் தலைநகரமான மங்களூரில் கிருஸ்துவ மிஷனரிமார் பெஸல் மிஷன் பிரஸ் (The Basel Mission Press) என்னும் அச்சகத்தை அமைத்து அதன் மூலமாகத் துளு மொழியில் கிருஸ்து மத நூல்களை வெளியிட்டார்கள். அந்த அச்சகத்தில் முதல்முதலாக மத்யூ அப்போஸ்தலரின் சுவிசேஷம் (Gospell of St. Mathew) என்னும் நூல் 1842 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இது லித்தோகிராப் என்னும் எழுத்தினால் அச்சிடப்பட்டது. புதிய ஏற்பாடு என்னும் விவிலிய நூல் 1859 இல் அச்சிடப்பட்டது. பிரிகல் பாதிரியார் துளு மொழி இலக்கண நூலை (A Grammar of the Tulu Language by Rev. J. Brigal) ஆங்கில மொழியில் எழுதி 1872 ஆம் ஆண்டில் அச்சிட்டார். மவ்னர் பாதிரியார் துளு ஆங்கில அகராதியை (Tulu- English Dictionary by Rev. Mauner) எழுதி அச்சிட்டார். இவ்வாறு 19ஆம் நூற்றாண்டில் துளுமொழியில் இலக்கியம் தோன்றிற்று. ஆனால், மேன் மேலும் துளுமொழி இலக்கியம் வளரவில்லை. இது வருந்தத்தக்கது.
பழைய காலத்திலிருந்தே துளுமொழியில் இலக்கிய நூல்கள் ஏற்பட்டிருக்குமானால் அவ்விலக்கிய நூல்கள், பழந்தமிழ்ச் சொற்களை ஒத்திட்டு ஆராய்வதற்குப் பெரிதுந் துணையாக இருந்திருக்கும். சங்க காலத்து இலக்கியங்களில் வழங்கப்பட்டு இப்போது வழக்கிழந்து போன பல தமிழ்ச் சொற்கள் இன்றும் துளு மொழியில் சிதைந்தும் மருவியும் உருமாறி வழங்குகின்றன. பழமையான இலக்கியம் இல்லாத நிலையிலும் துளு மொழியில் பல தூய தமிழ்ச் சொற்கள் சிதைந்து காணப்படுகின்றன என்றால், பழைய இலக்கியங்களைத் துளு மொழி பெற்றிருக்குமானால், அத்துளு இலக்கியம் பழந்தமிழ்ச் சொற்களை ஆராய்வதற்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் மொழியில் இப்போது வழக்கிழந்து போன பழைய சொற்கள் இப்போதும் துளு மொழியில் சிதைந்து காணப்படுவதை இங்கு எடுத்துக் காட்டுவோம். அதற்கு முன்பு துளு நாட்டு ஊர்ப்பெயர்கள் பல தமிழ்ச் சொல்லாக அல்லது திராவிட இனச் சொல்லாக இருப்பதைக் காட்டுவோம்.