உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு

245


என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய பி.டி. சீநிவாச ஐயங்கார் (History of the Tamils, P.T. Srinivasa Iyengar, 1927, p.501) காவல் மரமாக இருந்த கடம்ப மரத்துக்கும் பிற்காலத்தில் இருந்த கடம்ப அரசருக்கும் என்ன உறவு? அந்த உறவுக்கு என்ன சான்று? யவனக் கப்பல்களைத் தங்கள் நாட்டுத் துறை முகத்துக்கு வராதபடி தடுத்ததற்காகக் கடல் தீவில் இருந்தவர்களை வென்று அவர்கள் வளர்த்திருந்த கடம்பமரத்தை வெட்டி அடக்கினான் நெடுஞ் சேரலாதன். அது நிகழ்ந்தது கி.பி. 2ஆம் நூற்றாண்டில், யவன வாணிபம் தமிழ்நாட்டுடன் நடந்து வந்த காலத்தில். ஏறத்தாழ கி. பி. 250ல் தமிழ்நாட்டுடன் நடைபெற்ற யவன வாணிபம் நின்று விட்ட பிறகு, கி. பி. 5ஆம் நூற்றாண்டில் நெடுஞ்சேரலாதன் இருந்தான் என்று சரித்திரம் எழுதுகிறார் சீனிவாச ஐயங்கார்!

கே.ஜி. சேஷையரும் இந்தத் தவற்றைச் செய்கிறார். நெடுஞ்சேரலாதன் வென்ற இத்தீவின் மக்கள் பிற்காலத்தில் இருந்த கடம்ப குல அரசரின் முன்னோராக இருக்கலாம் என்று இவர் கூறுகிறார் (Cera Kings of the Sangam Period, K. G. Sesha Aiyar, 1937, p. 11,12). ஆனால், சீனிவாச ஐயங்கார் எழுதியது போல இவர், நெடுஞ்சேரலாதன் கி.பி 5ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று எழுதவில்லை. அவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டினன் என்பதே இவர் கருத்து.

சேரன் செங்குட்டுவன் என்னும் நூலை எழுதிய மு. இராகவையங்காரும், கடல் துருத்தியில் இருந்தவருக்கும் பிற்காலத்தில் இருந்த கடம்ப அரசருக்கும் தொடர்பு கற்பிக்கிறார். 'சேரலாதன் பகைவர் (கடல் துருத்தியில் கடம்ப மரத்தைக் காவல்மரமாக வளர்த்திருந்தவர்) கடம்பைத் தம் குலமரமாகக் கொண்டு மைசூர் தேசத்தின் மேல் பாலை ஆண்ட கதம்ப வேந்தராகக் கருதப்படுகின்றனர்” என்று அவர் எழுதுகிறார்.

கடல் துருத்தியில் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்தவர் வேறு. அவர்கள் கடம்பர் அல்லர். அவர்களுக்குக் கடம்பர் என்ற பெயர் இருந்ததில்லை. பிற்காலத்தில் பனவாசி நாட்டையரசாண்ட கடம்ப அரசர் வேறு. இவர்களையும் அவர்களையும் தொடர்புபடுத்துவது தவறு.

கடம்ப அரசர் குலத்தை உண்டாக்கிய மூல புருஷன் மயூரசர்மன் என்னும் பிராமணன். இவன் ஏறாத்தாழ கி.பி.360 இல் முடிசூடினான். இவனுடைய பிற்காலச் சந்ததியார் கடம்பர் என்று பெயர் பெற்றிருந்-