உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


கிழக்குக்கரைத் துறைமுகங்கள்

தமிழகத்தின் கிழக்குக் கரையிலிருந்த பழங்காலத் துறைமுகப் பட்டினங்களைக் கூறுவோம். இவை குணகடலில் (வங்காளக்குடாக் கடலில்) இருந்தவை. அந்தத் துறைமுகப் பட்டினங்கள் பிற் காலத்தில் மறைந்து போய்விட்டன. (வேறு புதிய துறைமுகங்கள் ஏற்பட்டுள்ளன). பழைய துறைமுகப்பட்டினங்களைப் பற்றிப் பழங்கால இலக்கிய நூல்களிலிருந்து அறிகிறோம். தமிழ்நாட்டின் கிழக்குக் கரைத் துறை முகங்கள் கொல்லத் துறை, எயிற்பட்டினம் (சோபட்டினம்), அரிக்க மேடு, காவிரிப்பூம்பட்டினம், தொண்டி, மருங்கை, கொற்கை என்பவை. தமிழ்நாட்டுக்கு அருகிலுள்ள இலங்கைத் தீவுடன் அக்காலத்தில் தமிழர் வாணிகம் செய்த படியால் அங்கிருந்த முக்கியத் துறைமுகப் பட்டினங்களையும் இங்குக் கூறுவோம். அவை மணிபல்லவம் (ஜம்பு கொலப் பட்டினம்), திருக்கேத்தீச்சரம் என்பவை.

தமிழகத்தின் தெற்கே கன்னியாகுமரியில் குமரித் துறைமுகம் இருந்தது. இந்தத் துறைமுகங்களை விளக்கிக் கூறுவோம்.

கொல்லத் துறை

கொல்லத் துறை என்னும் துறைமுகப்பட்டினம் வடபெண்ணை யாற்றின் தென்கரையில் அந்த ஆறு கடலில் கலக்கிற முகத்துவாரத்தில் இருந்தது. இதற்கு மேற்கே நெல்லூர் வட பெண்ணையாற்றின் கரை மேல் இருக்கிறது. இக்காலத்தில் இவை ஆந்திர தேசத்தைச் சேர்ந்து இருக்கின்றன. ஆனால் பழங்காலத்தில் கடைச்சங்க காலத்திலேயும் இவை தமிழ்நாடாக இருந்தன. அக்காலத்தில் இது தொண்டை நாட்டுத் துறைமுகப்பட்டினமாக இருந்தது. கொல்லத்துறை, நெல்லூர், பெண்ணையாறு என்னும் பெயர்களே தமிழ்ப் பெயர்களாக இருந்தன. கொல்லத்துறை பழந்தமிழ் நாட்டின் வடகோடியில் கிழக்குக் கரையில் இருந்தது. கொல்லத் துறை என்னும் பெயர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் கண்ட கோபாலபட்டினம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் அதன் பழைய பெயர் மறைந்துவிடவில்லை. கொல்லத் துறையான கண்ட கோபால பட்டினம் என்று அது கல்வெட்டுச் சாசனங்களில் கூறப்படுகின்றது.

தமிழ்நாட்டின் வடஎல்லை வேங்கடமலை (திருப்பதிமலை) என்று பழந்தமிழ் நூல்கள் கூறினாலும் அதன் சரியான வட எல்லை வட பெண்ணையாறே. ஆற்றைக் கூறாமல் மலையை எல்லையாகக்