உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

91


கண்டங்களும் (கருவாடு) ஆகியவற்றை நாவாய்களில் ஏற்றிக் கொண்டு போய் அயல்நாடுகளில் விற்று அங்கிருந்து குதிரை முதலான பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்ததைக் கூறுகிறார்.

‘முழங்கு கடல் தந்த விளங்குகதிர் முத்தம்

அரம் போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை பரதர் தந்த பல்வேறு கூலம்

இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்

பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர் கொழுமீன் குறை இய துடிக்கட் டுணியல்

விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்

நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்

புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோடனைத்தும் வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப

கொற்கை

(மது.கா.315-324)

மருங்கூர்ப் பட்டினத்துக்குத் தெற்கே கொற்கைக் குடாக் கடலும் அதன் மேற்குக் கரையில் கொற்கைப் பட்டினமும் இருந்தன. கொற்கையை, பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூல் கொல்கிஸ் (Kolkius) என்று கூறுகின்றது. தாலமியும் இதைக் கூறுகிறார். கொற்கைக் குடாக் கடல் அக்காலத்தில் நிலத்தின் உள்ளே ஐந்து மைல் ஊடுருவியிருந்தது. இங்கு முத்துச் சிப்பிகளும் சங்கு வளைகளும் உண்டாயின. கொற்கை முத்து உலகப் புகழ்பெற்றது. கொற்கைக் குடாக் கடலில் அக்காலத்தில் தாமிர பரணி ஆறு சென்று விழுந்தது. அந்த ஆற்றின் கரைமேல் கடற் கரைப் பக்கத்தில் பேர் போன கொற்கைப் பட்டினம் இருந்தது. இங்குப் பாண்டிய இளவரசன் இருந்தான். கி.பி.10-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கொற்கைக் குடாக் கடல் மண் தூர்ந்துடைய மறைந்து போய் இப்போது நிலமாக மாறிவிட்டது. கொற்கைக் குடாக்கடல் நிலமாக மாறிப் போனதற்குக் காரணம், தாமிரபரணி ஆறு அடித்துக் கொண்டு வந்த மணலும் கடல் அலை அடித்துக் கொண்டு வந்த மணலும் ஆக இரண்டு புறத்திலும் மணல் தூர்ந்தபடியினால்தான். மணல் தூர்ந்தது வெகுகாலமாக நடந்து கொண்டு வந்து கடைசியில் கடலே மறைந்து போயிற்று. கொற்கைப்பட்டினம் இருந்த இடம் இப் போது கடற் கரைக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் மாற மங்கலம் என்னும்