உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

124

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


'பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய

திருந்துவாள் வயவர்’

(அகம், 89:12-13)

உப்பு மூட்டைகள் மட்டுமல்லாமல் மிளகு முதலான வேறு பண்டங்களைச் சுமந்துகொண்டு போகக் கழுதைகளையும் அக்காலத்தில் பயன்படுத்தினார்கள்.

'இல்போல் நீழல் செல்வெயில் ஒழிமார்

நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப் புறநிறைப் பண்டத்துப் பொறையசாக் களைந்து'

(அகம், 343 :11-13)

உப்பு உற்பத்தியும் உப்பு வாணிகமும் செம்மையாக நடந்தன. தமிழகத்துக்கு உப்பு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாக வில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே ஏற்றுமதி செய்யவும் இல்லை. தமிழகத்திலே உண்டாக்கப்பட்டுத் தமிழகத்திலேயே செலவு செய்யப்பட்டது.

வளை (சங்கு)

சங்குக்குத் தமிழ்ப் பெயர் வளை என்பது. தமிழகத்தின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்தபடியால் வளை அதிகமாகக் கிடைத்தது. சங்குகளில் இடம்புரிச் சங்கு என்றும் வலம்புரிச் சங்கு என்றும் இருவகையுண்டு. வலம்புரிச் சங்கு கிடைப்பது அருமை. ஆகையால் வலம்புரிச் சங்குக்கு விலையதிகம். சங்குகளை வளைகளாக அறுத்து வளையல் செய்தார்கள். அக்காலத்துத் தமிழ் மகளிர் எல்லோரும் சங்கு வளைகளைக் கையில் அணிந்தார்கள். கண்ணாடி வளையல் அணிவது அக்காலத்து வழக்கம் அன்று. சங்கு வளை யணிவது மங்கலமாகக் கருதப்பட்டது. அரண்மனையில் வாழ்ந்த அரச குமாரிகள் முதல் குடில்களில் வாழ்ந்த ஏழைமகள் வரையில் எல்லோரும் அக்காலத்தில் சங்கு வளைகளை அணிந்தார்கள். ஆகவே வளைகளை (சங்குகளை) வளையல்களாக அறுத்து வளையல் உண்டாக்கும் தொழில் அக்காலத்தில் சிறப்பாக நடந்தது. கடல்களிலிருந்து சங்குகள் எடுக்கப்பட்டன.

கொற்கைக் கடலில் முத்து உண்டானது போலவே சங்குகளும் உற்பத்தியாயின. பரதவர் கடலில் முழுகிச் சங்குகளை எடுத்த போது, சங்கு முழங்கி ஊருக்குத் தெரிவித்தார்கள்.