பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
155
பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்த்தே.
(தொல். பொருள். செய்யுள். 189)
பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணஞ் சான்ற வறிவர் கண்டோர்
பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த வறுவரொடு தொகைஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்
(தொல். பொருள். செய்யுள். 182)
இச் சூத்திரங்களை நோக்கும்போது அறிவன், அறிவர் என்பவர் துறவிகளாகிய முனிவர் அல்லர் என்பதும், இல்லற வாழ்க்கையில் இருக்கும் கணிவர் என்பதும், கணவன் மனைவியருக்குள் ஊடல் முதலிய நிகழ்ந்தால் அவர்களுக்கு அறிவுரை கூறி இல்லற நெறியில் நிறுத்தினவர் என்பதும் தெரிகின்றன. எனவே, அறிவர் என்பதற்கு நச்சினார்கினியர் கூறும் துறவிகளாகிய முனிவர் என்னும் பொருள் தவறு என்பதும் இளம்பூரண அடிகள் கூறுகிற கணிவர் என்பதே சரியான பொருள் என்பதும் தெரிகின்றன. அறிவர் முகூர்த்தம் கணித்துத் திருமணநாளைக் கூறினர் என்பதைக் கலித்தொகை (குறிஞ்சிக்கலி 39 ஆம் பாட்டு) கூறுகிறது.
நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத்
தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக
வேய்புரை மென்றோட் பசலையு மம்பலும்
மாயப் புரணர்ச்சியு மெல்லா முடனீங்கச்
சேயுவர் வெற்பனும் வந்தனன்
என்பது அச்செய்யுட் பகுதி. இதில் மணமகன் சான்றவரையும் அறிவனையும் முன்னிறுத்தித் திருமணத்துக்கு வந்தான் என்று கூறப்படுகிறது. வந்த அறிவன் முகுர்த்த நாளை நன்கறிந்தவன் என்று கூறப்படுகிறபடியால், அறிவன் கணிவன் என்பதில் ஐயமில்லை.
அகநானூறு 98 ஆம் செய்யுளில் அறிவர் கூறப்படுகிறார். தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லு வாளாய்ச் சொல்லியது என்னும் துறையுடைய குறிஞ்சித்திணைச் செய்யுளில் இவர் கூறப்படுகிறார்: