208
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
கருவூரே சேரர்களின் தலைநகரம் என்பதை நிலைநாட்டுவதற்காகத் திரு. ரா. இராகவையங்கார் ‘வஞ்சிமாநகர்’ என்னும் நூலை எழுதினார். இந்த நூல் தெளிவு இல்லாமல் படிப்பவருக்குக் குழப்பத்தையும் ஐயத்தையும் மேன்மேலும் கிளப்பிவிட்டது. இவரை ஆதரித்துத் திரு.மு. இராகவையங்கார் தாம் எழுதிய ‘சேரன் செங்குட்டுவன்’ என்னும் நூலில் எழுதினார்கள்.1
சேரநாட்டை அரசாண்ட சேரமன்னர்களின் தலைநகரம், சேர நாட்டிலே முசிறி துறைமுகத்துக்குக் கிழக்கே இருந்தது. அதற்கு வஞ்சி நகரம் என்றும் கருவூர் என்றும் பெயர்கள் வழங்கின. சேர மன்னர், தங்களுடைய சேரநாட்டுக்குக் கிழக்கேயுள்ள கொங்கு நாட்டைக் கைப்பற்றி அந்நாட்டையும் அரசாண்டார்கள். அப்போது அவர்கள் கொங்கு நாட்டின் தலைநகரத்துக்குத் தங்களுடைய தலைநகரமான வஞ்சிக் கருவூரின் பெயரையே சூட்டினார்கள். ஆகவே, சங்க காலத்திலேயே சேரநாட்டிலும் கொங்கு நாட்டிலும் வஞ்சி (கருவூர்) என்னும் பெயருள்ள இரண்டு ஊர்கள் இருந்தன.2 இந்த வரலாற்று உண்மையை அறியாதபடியால், சில ஆண்டுகளுக்கு முன்பு சில அறிஞர்கள், கருவூர் (வஞ்சி) பற்றி இருவேறு கருத்துக்களைக் கூறி விவாதம் செய்தார்கள்.
இரண்டு வஞ்சிமா நகரங்களையும் (கருவூர்களையும்) சங்க நூல்கள் கூறுகின்றன. இடைக்காலத்தில் சேரநாட்டு வஞ்சிக் கருவூர் என்னும் பெயர் மறைந்து, அஞ்சைக்களம் என்றும் கொடுங்கோளூர் என்றும் பெயர் பெற்றது. பிற்காலத்தில், அஞ்சைக்களமும் (கொடுங்கோளூரும்) மறைந்து போயிற்று.
சங்க காலத்தில் சேரநாட்டின் தலைநகரமாக இருந்த வஞ்சிக் கருவூரின் அமைப்பு, எப்படி இருந்தது என்பதை இங்கு ஆராய்வோம். இந்த ஆய்வுக்குப் பேருதவியாக இருப்பவை சங்க நூல்களே. வஞ்சிமா நகரத்தின் அமைப்பைக் கூறுவதற்கு முன்பு சேரநாட்டின் அமைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். அக்காலத்தில் குடகடல் என்று குறிப்பிடப்பட்ட இப்போதைய அரபிக்கடல், சேரநாட்டின் மேற்கு எல்லையாக இருந்தது. சேரநாட்டின் கிழக்கு எல்லை சையமலைத் தொடர்களாகும். சையமலைத் தொடர் இக்காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் என்னும் பெயர் பெற்றுள்ளன. அரபிக்கடலுக்கும் சையமலைக்கும் இடையேயுள்ள சேரநாடு, அகலம் குறைந்தும் வடக்குத்தெற்காக நீண்டும் உள்ளது. கடலுக்கும் மலைக்கும் இடையேயுள்ள அகலம், ஐம்பது மைலுக்குள்ளாகவே உள்ளது.