உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

253


17. சேரநாட்டு முத்து**

இக்காலத்தில் மலையாள நாடாக மாறிப்போன சேரநாடு, பண்டைக் காலத்திலே தமிழ்நாடாக இருந்தது. தமிழ்நாடாக இருந்த சேர நாட்டைச் சேர மன்னர்கள் அரசாண்டார்கள். சேர நாட்டின் பழைய வரலாற்றுக் குறிப்புகள் பழைய தமிழ் நூல்களிலே காணப்படுகின்றன. பழைய சங்க நூல்களிலே காணப்படுகிற செய்திகளில் சேரநாட்டு முத்தைப் பற்றிய செய்தியும் ஒன்றாகும். இச் செய்தியைக் கேட்பவர் வியப்படைவார்கள். “இது என்ன புதுமை! பாண்டிநாடு தானே முத்துக்குப் பேர்போனது. சேர நாட்டிலும் முத்து உண்டாயிற்றா!" என்று கூறுவர்.

ஆம். பாண்டிய நாட்டுக் கொற்கைக் கடலிலே உண்டான முத்துக்கள் உலகப் புகழ் பெற்றவைதான். தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் பாண்டி நாட்டு முத்துக்களைப் புகழ்ந்து பேசுகின்றன. பாரத தேசத்தில் மட்டும் அல்லாமல் எகிப்து தேசத்திலும் உரோமாபுரியிலும் பண்டைக் காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்கள் புகழ் பெற்றிருந்தன. உரோமாபுரிச் சீமாட்டிகள் தங்கள் நாட்டுப் பொன்னைக் கொடுத்துத் தமிழ் நாட்டு முத்துக்களைப் பெற்றுக்கொண்டார்கள். மேல் நாட்டு யவன கப்பல்கள் தமிழ் நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து ஏனைய பொருள்களோடு முத்துக்களையும் வாங்கிக் கொண்டு போயின.

பேர்போன பாண்டிய நாட்டு முத்துக்கள் உண்டான அதே காலத்தில் மேற்குக் கடற்கரையிலே சேர நாட்டிலேயும் முத்துக்கள் உண்டாயின. பாண்டிய நாட்டு முத்துக்களுக்கு அடுத்தபடியாகச் சேர நாட்டு முத்துக்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் சிறப்பும் மதிப்பும் பெற்றிருந்தன. இதற்குத் தமிழ் நூலில் மட்டுமல்லாமல் வடமொழி நூலிலும் சான்று கிடைக்கின்றது.

சேர அரசர்களைப் பற்றிக் கூறுகிற பதிற்றுப்பத்து என்னும் சங்கத் தமிழ் நூலிலே சேர நாட்டில் முத்து உண்டான செய்தி கூறப் படுகிறது. பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தில், கபிலர் என்னும் புலவர் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் சேர மன்னனைப் புகழ்ந்து பாடுகிறார். அதில், சேர நாட்டுப் பந்தர் என்னும் ஊர் முத்துக்களுக்கும் தெ. பொ. மீ. மணிவிழா மலர். 1961.