258
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
18. தமிழ் நாட்டில் யவனர்**
ஐரோப்பா கண்டத்தின் தென்பகுதியில், மத்தியதரைக் கடல் ஓரத்தில் கிரேக்க நாடு இருக்கிறது. கிரேக்க நாட்டுக் கிரேக்கர்கள் பண்டைக் காலத்திலே வீரத்திலும் பண்பாட்டிலும் கல்வியிலும் கலையிலும் சிறப்படைந்திருந்தார்கள். அவர்கள் வளர்த்த சிற்பக் கலைகள் (கட்டிடக் கலையும் உருவங்களை அமைக்கும் கலையும்) உலகப் புகழ்பெற்றவை. அதுபோலவே அவர்கள் மரக்கலம் அமைப்பதிலும் அவற்றைக் கடலில் ஓட்டிக் கப்பல் பிரயாணம் செய்வதிலும் பேர் பெற்றிருந்தார்கள்.
கிரேக்க நாட்டின் ஒரு பகுதிக்கு அயோனியா (Ionia) என்று பெயர். அயோனிய கிரேக்கருக்கு அயோனியர் என்று பெயர். அயோனியர், தமிழில் யவனர் என்று அழைக்கப்பட்டனர். ஆகவே யவனர் என்றார் கிரேக்கர் என்பது பொருளாகும். சுதந்தரமாக நல் வாழ்வு வாழ்ந்திருந்த யவனர்களாகிய கிரேக்கர்கள், பிற்காலத்தில், அவர்களுக்குப் பக்கத்து நாடாகிய இத்தாலி நாட்டுக்குக் கீழடங்கி யிருந்தார்கள். இத்தாலி நாட்டின் உரோம சாம்ராச்சியம் ஒருகாலத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் மிகப் புகழ் பெற்றிருந்தது. கிரேக்கராகிய யவனர், உரோத சாம்ராச்சியத்திற்குக் கீழடங்கியபோதிலும், கல்வி, பண்பாடு, கலை முதலியவற்றில் முன்போலவே மேம்பட்டிருந்தார்கள். உரோமர்கள், கப்பல் படைகளை வைத்திருந்தது உண்மைதான்.
னாலும், அவர்கள் கிரேக்கர்களாகிய யவனர்களைப் போலச் சிறந்த நாவிகர்கள் அல்லர். உரோம சாம்ராச்சிய காலத்திலும் யவனர்கள்தாம் கப்பல் வாணிகராகவும் நாவிகர்களாகவும் திகழ்ந்தார்கள்.
கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் கிரேக்க மன்னனான மகா அலக் சாந்தர் என்பவன் கிழக்கே சிந்துநதிக்கரை வரையில் உள்ள நாடுகளை வென்றான். அவன், எகிப்து தேசத்திலே நீலநதி மத்திய தரைக் கடலில் கலக்கிற இடத்திலே அலக்சாந்திரியம் என்னும் துறைமுகத்தை அமைத்தான். அந்தத் துறைமுகப்பட்டினம் பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்று விளங்கிற்று. கிரேக்கராகிய யவனர்கள், அலக்சாந்திரியத் துறைமுகப்பட்டினத்திலே குடியேறியிருந்தார்கள்.
கலைக்கதிர். பிப்ரவரி. 1961.