________________
மறுக்கப்பட்டவர்கள் பேச வந்தார்கள். முதல்முறையாக எழுத்தைக் கற்றுக்கொண்டவர்கள் பேச வந்தார்கள். அவர்களுக்கு ஏற்கெனவே சொல்தொகுதி ரொம்ப அதிகம். காங்கிரஸ் இயக்கத்திலிருந்து கொண்டு தற்கால அரசியல் சூழலுக்குகந்த வகையில் தமிழைக் கையாண்டவர்களில் வரதராஜுலு நாயுடு, திரு.வி.க.,பெரியார் ஆகியோர் முக்கியமானவர்கள். இதில் பெரியார் பேச்சு சற்று வேறுபட்டிருக்கும். ஏனென்றால் அவர் முறையான பள்ளிக் கல்வியோ இலக்கியக் கல்வியோ பெற்றவர் அல்லர். அவருக்குக் கடைசிவரைக்கும் 'காய்ச்சல்' என்று சொல்ல வராது.'காயலா' என்றுதான் சொல்லுவார். அவருடைய எழுத்துமொழியிலே கூட 'காயலா' என்ற சொல்தான் இருக்கும். காய்ச்சல் என்ற சொல் இருக்காது. அவரைப் பின்பற்றி வந்தவர்களில் பலர் மேலோர் மரபிலே பேசாமல், வழக்காறுகளைப் பயன்படுத்தினார்கள். இவர்களின் வழித்தோன்றல்களாக வந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னணிப் பேச்சாளர்களாகக் கருதப்பட்ட பலர் கதையில்லாமல், பழமொழிகளைக் கையாளாமல் பேசமாட்டார்கள். அவர்களுடைய பேச்சுகளில் வழக்குச் சொற்கள் நிறைய இருக்கும். எனவே வழக்குமொழிக்கான மரியாதை, பேச்சு மொழிக்கான மரியாதை, பேச்சு மொழி மட்டுமே அறிந்தவர்களுக்கான சமூக அங்கீகாரம் போன்றவை இவர்களுடைய மொழி மூலமாக வந்தது. விலக்கப்பட்ட சொற்கள் என்பனவற்றை ஒரு கலக மரபோடு பெரியார் உடைத்தார். அந்தக் கலக மரபு அவருக்குப் பின்னால் வந்த எல்லோரிடமும் இல்லை; என்றாலும் கூட அதுவரையிலே மேடையில் விலக்கப்பட்ட சொற்களை இவர்களால்தான் சொல்ல முடிந்தது. ஒருவிதத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இந்தப் போக்கு தொடங்கிவிட்டதாகச் சொல்லலாம். உதாரணத்துக்கு 'ஒழிக' என்ற சொல்லை வள்ளலார் கவிதையிலே பயன்படுத்து கிறார். 'கருணையிலா ஆட்சி கடிந்து ஒழிக' என்கிறார். வள்ளலார் காலத்துக்குப் பின்னால் ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றங்களின் விளைவாகத் தோன்றிய திராவிட இயக்கம் இத்தகைய போக்கை எதிரொலித்தது. அவ்வியக்கம் ஏற்படுத்திய வழக்குமொழிக்கான அங்கீகாரம் அது சாதித்த அதிகார மாற்றத்திற்கு அடிகோலியது. ஆனால், இந்தப் பாரதூரமான மாற்றமானது பாடநூல்களில் எதிரொலித்ததாகத் தெரியவில்லை. இல்லை. காரணம், பாடநூல்கள் எல்லாம் வெள்ளைக்காரன் ஆட்சியிலேயே நிலைபெற்றுவிட்டன. ஒருவித உறைநிலைக்கு 1582 தொ. பரமசிவன்