உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/இன்பமும் துன்பமும்

விக்கிமூலம் இலிருந்து

வெப்பக் கொடுமை தாங்காமல்
வீதி நடுவே செத்ததுபோல்
சர்ப்பம் ஒன்று கிடந்ததடா.
சற்றும் அசைய வில்லையடா.

இரையைத் தேடிப் பறந்துமிக
ஏங்கித் திரிந்த ஒருகாகம்
விரைந்து கீழே பாய்ந்ததடா.
‘விர்’ரெனத் தூக்கிச் சென்றதடா.

செத்துப் போனது பாம்பெனவே
தீர்மா னித்தே அக்காக்கை
கொத்தித் தின்னப் பார்த்ததடா
கொடிய காலம் வந்ததடா!

தூக்கம் நீங்கி அப்பாம்பு
துடிது டித்தே எழுந்ததடா.
தூக்கிச் சென்ற காக்கை தனைத்
துணிந்து கடித்து விட்டதடா.

கடித்ததும் வலியைத் தாங்காமல்
காக்கை சுருண்டு வீழ்ந்ததடா.
துடித்தது, சாகும் தறுவாயில்
சொல்லிய வார்த்தைகள் இவையேயாம்:


‘இன்பம் பெறலாம் இவ்வுணவால்
எனநான் நினைத்தேன். ஆனாலோ
துன்பம் பெற்றேன். என்வாழ்வும்
சோகக் கதையாய் முடிந்ததுவே?’