________________
எனக் குறிக்க வந்த சேக்கிழார், 'அசைவில் செழும் தமிழ் வழக்கு' எனச் சைவத்தையும், 'அயல் வழக்கு' எனச் சமணத்தையும் குறிப்பிடுகிறார். சமணமும் சைவமும் தமிழ் மொழியினைத் தெய்விக நிலை சார்ந்தனவாகக் கருதின. ஆயும் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்(டு) ஏயும் புவனிக்கு இயம்பிய அருந்தமிழ் என்பது யாப்பருங்கலம். பாணினிக்கு வடமொழியையும், அதற் கிணையான தமிழ் மொழியைக் குறுமுனியான அகத்தியர்க்கும் சிவபெருமான் அளித்தார் என்றும் சைவ இலக்கியங்கள் கூறும் 'தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்' என்று கம்பரும் இக்கருத்தினை ஏற்றுப் பேசுகிறார். வடமொழி ஆதிக்கமும் தெலுங்கு மொழி ஆதிக்கமும் அரசியல் அறிந்த தமிழர்களால் உணரப்பட்ட இடைக்காலத்தில் தமிழ் தெய்வத் தன்மை உடையதாகவும் தாயாகவும் கருதப்பட்டது. 15ஆம் நூற்றாண்டில் வில்லிபாரதத்திற்கு வரந்தருவார் தந்த பாயிரமும் 17ஆம் நூற்றாண்டில் எழுந்த தமிழ்விடுதூதும் இதை உணர்த்தும். அதே காலத்தில் 'தலைப் பாவலர் தீஞ்சுவைக் கனியும் தண் தேன் நறையும் வடித்தெடுத்த சாரம் கனிந்தூற்றிருந்த பசுந்தமிழ்' முருகக் கடவுளின் திருவாயில் மணக்கிறது என்பர் குமரகுருபரர். 19ஆம் நூற்றாண்டில் மனோன்மணியம் சுந்தரனார் காலந்தொட்டுத் 'தமிழ்' அரசியல், சமூக, பண்பாட்டு அளவில் ஒரு மந்திரச் சொல்லாகவே தொழிற்படுகிறது. 'தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே' என்று தமிழை முத்தி தரும் பொருளாகவும் தமிழ்விடுதூது குறிப்பிடுவது இங்கு உணரத்தகும். இந்த உணர்வினை உள்வாங்கிக் கொண்டு, சமூக நீதிக்குப் போராடிய பாரதிதாசன் தமிழைத் தாயாகவும், தெய்வமாகவும், போராட்டக் கருவியாகவும் கொண்டது தமிழ் நாடு அறிந்த செய்தி. நாட்டார் வழக்காறுகளில் தமிழ் எனும் சொல், செம்மை யாகப் பேசப்படும் மொழியினை உணர்த்துகிறது. மன்றங்களிலும் வழக்காடும் இடங்களிலும் பேசப்படும் மொழியினை அச்சொல் குறித்திருக்கிறது. தங்கத் தமிழ் பேச உங்க தாய் மாமன் வருவாங்க என்பது தாலாட்டு. தங்கத் தமிழ் அடியாம் தாசில்தார் கச்சேரியாம் என்பது ஒப்பாரிப் பாடல் வரி.
16 தொ.பரமசிவன்