ஈசாப் கதைப் பாடல்கள்/சோதிடர் ஓடினார்!
சந்தை கூடும் இடத்திலே
சாலை ஓரம் தன்னிலே
குந்தி இருந்த சோதிடர்
குறிகள் பார்த்துக் கூறுவார்.
‘அதிர்ஷ்டப் பரிசு கிடைக்குமா?’
‘ஆண்கு ழந்தை பிறக்குமா?’
‘மதிப்பு உலகில் உயருமா?’
‘மனத்தில் கவலை நீங்குமா?’
இந்த வகையில் கேள்விகள்
ஏது ஏதோ அவரிடம்
வந்து மக்கள் கேட்பது
வழக்க மாகி விட்டது.
கும்பல் ஒன்று சுற்றிலும்
கூடி அன்று நிற்கையில்,
அம்பு போலப் பாய்ந்துமே
அங்கோர் பையன் வந்தனன்.
இரைக்க இரைக்க வந்தவன்
‘என்னே! நமது சோதிடர்
இருக்கும் வீடு தீயிலே
எரியு’ தென்றே கதறினன்.
பையன் சொல்லைக் கேட்டதும்
பதறி எழுந்த சோதிடர்,
‘ஐயோ, அப்பா!’ என்றுமே
அலறி ஓட்டம் பிடித்தனர்.
முன்னால் அவரும் வேகமாய்
மூச்சுப் பிடித்து ஓடவே,
பின்னால் அவரைத் தொடர்ந்தது,
பெரிய கூட்டம் ஒன்றுமே.
நாடி தளர்ந்து விட்டது.
நாக்குத் தொங்கிப் போனது.
ஓடி வந்தார் அப்படி,
உடல்கு லுங்கச் சோதிடர்!
‘மனைவி மக்கள் தீயிலே
மடிந்து, வீட்டில் உள்ளவை
அனைத்தும் பொசுங்கிச் சாம்பலாய்
ஆன’ தென்றே எண்ணினர்.
எண்ணம் போல வீட்டிலே
எதுவும் நடக்க வில்லையே!
என்றும் உள்ள நிலையிலே
இருந்த வீட்டைக் கண்டனர்.
புரளி செய்த பையனைப்
பிடித்துக் கொண்டு சோதிடர்
மிரட்டிக் கேட்க லாயினர்.
மீசை இரண்டும் துடித்தன.
‘நாட்டுக் கெல்லாம் சோதிடம்
நானுரைப்பேன் என்கிறீர்.
வீட்டில் தீ, தீ என்றதும்,
விழுந்தடித்து வருகிறீர்!
எந்த விஷயம் நடப்பினும்
எனக்குத் தெரியும் என்கிறீர்.
சொந்த விஷயம் அறிந்திடச்
சோதி டத்தால் முடிந்ததோ?
பையன் இதனைச் சொன்னதும்
பக்கம் இருந்த அனைவரும்
கையைத் தட்ட லாயினர்;
கலக லென்று சிரித்தனர்!