உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாட்டு அசைவுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கனமான நான்கு அடி நீள உலக்கையைக் கொண்டு கல்லுரலில் குற்றுதல் கடுமையான உடல் உழைப்பிற்கு உரிய தொழிலாகும். எனவே குற்றும்போது பெண்கள் 'உஸ்', 'உஸ்' என்ற சத்தத்தை இசை ஒழுங்காகக் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக எழுப்புகின்றனர். சில பகுதிகளில் 'சும்மேலோ, சும் உலக்காய்' என்று சொல்கின்றனர். முற்காலத்தில் ஆண்கள் பாடும் படகுப் பாட்டு போலப் பெண்கள் உலக்கைப் பாட்டு பாடியிருக்கிறார்கள். இதற்கு 'வள்ளைப் பாட்டு' என்று பெயர். மலைபடுகடாம், "தினை குறு மகளிர் இசைபடு வள்ளை யும்" (342) என்று வள்ளைப் பாட்டின் இனிமையினைக் குறிப்பிடுகிறது. வள்ளைப் பாட்டுக்களின் இலக்கியப் பெருமையை இளங்கோவடிகளும், மாணிக்கவாசகரும் நன்றாக உணர்ந்திருந்தனர். புகார் நகரத்துப் பெண்கள் கரும்பு உலக்கை கொண்டும், மதுரை நகரத்துப் பெண்கள் பவள உலக்கை கொண்டும், வஞ்சி நகரத்துப் பெண்கள் சந்தன உரலிலும் முத்துக்களைக் குற்றுவதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார் (சிலம்பு : வாழ்த்துக் காதை). மணிவாசகரோ, 'திருப்பொற்சுண்ணம்' என்ற பகுதியில் சிவ பெருமான் நீராட வாசனைப் பொடியை உரலிலிட்டு இடிக்கும் பெண்கள் பாடுவதாகப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். வள்ளைப் பாட்டுப் பாடும் பெண்கள் பாட்டின் நடுவில் தம் காதலன் பெயரையும் சேர்த்துப் பாடுவார்கள். அதைப் பிறர் கண்டுபிடித்துக் கேலி பேசுவர் அல்லது அலர் எழுப்புவர் எனக் குறுந்தொகைப் பாடல் நமக்குச் செய்தி தருகிறது (89) அகன்ற வலிய காலை உடைய உரல் (பணைத்தாள் அன்ன பாவடி உரல் - குறு 89), அவல் இடிக்கும் கரிய வயிரம் பாய்ந்த உலக்கை (பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை - குறு 238) என்று உரல் உலக்கையின் அமைப்புப் பற்றிய குறிப்புக்களும் நமக்குக் கிடைக்கின்றன. கருங்காழ் என்பதனால் உறுதியான கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட உலக்கையாகவும் இருக்கலாம். உரல், உலக்கை பற்றிய நம்பிக்கைகளும் தமிழ் மக்களுக்கு நிறையவே இருந்திருக்கின்றன. உலக்கையை எப்போதும் நட்டமாகவே சுவரில் சார்த்தி வைக்க வேண்டும். தரையில் கிடத்தக்கூடாது. பூப்பெய்திய பெண்ணை வீட்டின் ஒரு மூலையில் உட்காரவைத்து (இரும்புப்) பூண் கட்டிய உலக்கையினை அவளுக்குக் குறுக்காகக் கிடை வசத்தில் வைப்பார்கள். இது தீய ஆவிகளிடம் இருந்து அப் பெண்ணைக் காப்பதாக நம்புகிறார்கள். வாழ்வரசிப் (சுமங்கலி) பெண்கள் உரலின்மீது உட்காரக்கூடாது; பண்பாட்டு அசைவுகள் 37