உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/பரிசு

விக்கிமூலம் இலிருந்து

முருகன் வேட்டை ஆடினன்;
முயவில் ஒன்றைப் பிடித்தனன்;
பெருமை யோடு தோளிலே
போட்டுக் கொண்டு திரும்பினன்.

எதிரே ஒருவன் குதிரையில்
ஏறி வரவே கண்டனன்.
குதிரைக் காரன் முயலினைக்
கூர்ந்து பார்த்துக் கூறினன்.

‘அன்பு மிக்க நண்பனே,
அந்த முயலைத் தந்திடு.
என்ன விலை கேட்பினும்
இஷ்டத் தோடு தருகிறேன்’

குதிரைக் காரன் இப்படிக்
கூறக் கேட்ட முருகனும்
அதிக ஆசை கொண்டனன்!
ஐந்து பத்துக் கேட்டனன்.

‘சரிதான்’ என்றே அவனுமே
தலையை ஆட்டிக் கூறியே,
முருக னுடைய முயலினை
முதலில் வாங்கிக் கொண்டனன்.


தட்டி ஓட்ட லாயினன்,
தயக்க மின்றிக் குதிரையை.
‘துட்டு! துட்டு’ என்றுமே
துரத்தி முருகன் ஓடினன்.

துரத்திச் சென்றான்; ஆயினும்
சோர்ந்து போனான். மிகவுமே
உரத்த குரலில் கூவியும்
ஒன்று மில்லை பயனுமே.

அதிக தூரம் ஓடியே
அலுத்துப் போன முருகனும்
குதிரை சென்ற திசையிலே
குரல் எடுத்துக் கூறினன்;

‘குதிரைக் கார நண்பனே!
கொண்டு செல்வாய் முயலினை,
அதனை உனக்கு நானுமே
அளித்த பரிசாய்க் கொள்ளுவாய்!’