உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/ஏமாற்றம்

விக்கிமூலம் இலிருந்து

ஒருநாள் இரையே கிடைக்காமல்
ஓநாய் ஒன்று அலைந்ததுவே.
அருகில் ஏதோ குரல்கேட்க
அங்கே சென்று பார்த்ததுவே.

சின்னக் குழந்தை அழுதிடவே
சொன்னாள் தாயார் அதனிடத்தே.
‘உன்னை வெளியே எறிந்திடுவேன்;
ஓநாய் தின்ன விட்டிடுவேன்.’

தாயார் சொன்னது நிஜமென்றும்,
தனக்கு நல்ல உணவென்றும்,
ஓநாய் எண்ணி அவ்விடத்தே
உட்கார்ந் திருந்தது, ஆவலுடன்.


அஞ்சி அந்தக் குழந்தையுமே
அழுகை நிறுத்திட, அம்மாவும்
கொஞ்சி மகிழ்வுடன் கூறுகிறாள்,
குழந்தை உள்ளம் குளிர்ந்திடவே:

‘ஓநாய் வந்தால் உடனேயே
உதைத்துக் கொல்வோம்’ என்றதுமே.
ஓநாய் கேட்டு உடல்நடுங்கி
ஓட்டம் பிடித்தது காட்டிற்கே!