உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/ஒரு நாள் வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

மலர்கள் நிறைந்த சோலையிலே
வாடா மல்லிகைப் பூவொன்று

அருகில் இருந்த ரோஜாவை
அழைத்துக் கூற லானதுவே:

‘அழகு மிக்க மலரேநீ
அற்புத வாசனை பரப்புகிறாய்.

கண்டோர் உள்ளம் கவருகிறாய்.
கடவுள் பூசைக் குதவுகிறாய்.

பெண்கள் தலையில் தோன்றுகிறாய்.
பெரியோர் கழுத்தில் விளங்குகிறாய்.

உன்போல் பெருமை உடையவர்கள்
உலகில் உண்டோ வேறொருவர்?’


என்றதும். உடனே ரோஜாப்பூ
புன்சிரிப் புடனே கூறியது:

‘ஆமாம்,வாடா மல்லிகையே.
ஆயினும், இந்த உலகினிலே

எத்தனை நாட்கள் வாழ்கின்றேன்?
எனது வாழ்வே ஒருநாள்தான்.

மனிதர் என்னைப் பறித்ததுமே
மனமும் உடலும் வாடுகிறேன்.

அவர்கள் என்னைப் பறிக்காமல்
அப்படி யேதான் விட்டிடினும்,

மறுநாள் கீழே வீழ்கின்றேன்.
மண்ணொடு மண்ணாய்ப் போகின்றேன்.

அழகும் மணமும் இருந்திடினும்
அடியேன் உன்போல் பலநாட்கள்

உலகில் வாழ முடிந்திடுமோ?

உரைப்பாய், வாடா மல்லிகையே!’