உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/கதை சொன்னவர் கதை

விக்கிமூலம் இலிருந்து

கதை சொன்னவர் கதை

அந்தக் காலத்தில் சந்தையில் ஆடு மாடுகளை விற்பதைப் போல், மனிதர்களையும் விற்று வந்தனர். அப்படி விற்கப்பட்ட ஒரு மனிதர்தாம் ஈசாப். அவரை சாந்தஸ் என்பவர் விலைக்கு வாங்கித் தம்மிடம் அடிமையாக வைத்திருந்தார்.

ஒரு நாள், சாந்தஸ் குடி வெறியில் தமது நண்பர்களிடம் ஒரு பந்தயம் கட்டி விட்டார். அதாவது, சமுத்திரத்தில் உள்ள தண்ணீர் முழுவதையும் அவர் குடித்துப் பொட்டலாக்கி விடுவதாகவும், அப்படிச் செய்யாவிடில், தம் சொத்து முழுவதையும் கொடுத்து விடுவதாகவும் கூறினார்.

ஆனால், மயக்கம் தெளிந்ததும், தாம் செய்த முட்டாள்தனத்தை உணர்ந்தார். ‘இதற்கு என்ன வழி?’ என்று தம்மிடம் அடிமையாக இருந்த ஈசாப்பைக் கேட்டார்.

ஈசாப் ஒரு நல்ல யோசனை கூறினார்; அதன்படி சமுத்திரத்திலுள்ள நீரைக் குடிக்க சாந்தஸ், ஈசாப்புடன் புறப்பட்டார். மற்றவர்களும் சென்றனர்.

சமுத்திரத்தை அடைந்ததும், ஈசாப் அங்கு நின்றவர்களைப் பார்த்து, “நண்பர்களே, எங்கள் எஜமானர் சமுத்திரத்திலுள்ள நீர் முழுவதையும் குடிக்கத் தயார்தான். அவர் சமுத்திரத்திலுள்ள நீரை மட்டுமே குடிப்பதாகக் கூறினார். ஆனால், இப்போது பல ஆறுகளிலிருந்தும் நீர் வந்து சமுத்திரத்தில் விழுந்து கொண்டே இருக்கின்றதே! குடிக்கக் குடிக்கத் தண்ணீர் வந்து கொண்டேயிருந்தால், எப்படிக் குடித்துப் பொட்டலாக்குவது? ஆகையால், முதலில் ஆற்று நீர் சமுத்திரத்தில் விழாதபடி முகத்துவாரத்திலேயே அடைத்து விட வேண்டும். அப்போதுதான் என் எஜமானர் சொன்னபடி செய்வார்” என்றார்.

உடனே, வேடிக்கை பார்க்க அங்கு வந்திருந்தவர்கள், “ஆமரம் ஆமாம். அதுதான் சரி” என்று கூச்சலிட்டனர்.

பந்தயம் கட்டியவர்களுக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. வெட்கத்துடன் திரும்பி விட்டனர்.

இப்படி அவர் எவ்வளவோ வேலைகளை யுக்தியுடன் செய்திருக்கிறார். இதனால்தான் அவருக்கு விரைவிலே விடுதலை கிடைத்தது. அடிமையாக இல்லாமல், எங்கும் இஷ்டம் போல் சுற்றித் திரிய முடிந்தது. சுற்றித் திரிந்து, குட்டிக் கதைகளைக் கூறவும் முடிந்தது.

ஈசாப் மிகுந்த புத்திசாலி. அவர் பேச்சும், செய்கையுமே அதை நன்கு காட்டுகின்றன.

அவர் அடிமையாக இருந்த போது, ஒரு நாள் அவருடைய எஜமானர் வெளியூர் செல்லப் புறப்பட்டார். சாமான்களைத் தூக்கி வருவதற்காகத் தம்முடன் சில அடிமைகளையும் அழைத்துச் செல்வது அந்த எஜமானரின் வழக்கம்.

அன்று எடுத்துச் செல்ல வேண்டிய சாமான்களை ஈசாப் ஒரு முறை பார்த்தார். பிறகு, மற்ற அடிமைகளைப் பார்த்து, “எனக்கு அதிக கனமில்லாத சுமையைத் தர வேண்டும்” என்று கேட்டார்

ஈசாப்பிடம் மற்ற வேலைக்காரர்களுக்கு எப்போதுமே நல்ல மதிப்பு உண்டு. ஆகையால், “சரி, உனக்கு வேண்டிய சாமானை எடுத்துக் கொள்” என்றார்கள், அவர்கள்.

உடனே ஈசாப் அங்கிருந்த பெரிய கூடை ஒன்றை எடுத்துக் கொண்டார். அக்கூடை நிறைய ரொட்டிகள் இருந்தன, வழியில் சாப்பிடுவதற்காக. ஈசாப் பெரிய கூடையைத் தூக்கிக் கொண்டதும்: மற்ற அடிமைகள் சிரித்தார்கள்.

118

“என்னப்பா இது! கனமில்லாத சுமையாக வேண்டுமென்று கேட்டாய். இவ்வளவு பெரிய கூடையைத் தூக்கிக் கொண்டிருக்கிறாயே!” என்றார்கள்.

ஈசாப் ஒன்றும் பதில் கூறவில்லை.

ஆனால், ஈசாப் ஒரு முட்டாளல்ல என்பதை அவருடைய நண்பர்கள் தெரிந்து கொள்ள வெகு நேரமாகவில்லை. ஈசாப் வைத்திருந்த கூடையிலிருந்த ரொட்டிகளை, வேளா வேளைக்கு அவர்கள் எடுத்துத் தின்று வந்ததால், கனம் குறைந்து கொண்டே வந்தது. செல்ல வேண்டிய ஊரை நெருங்கும் போது, ஈசாப் வெறும் கூடையுடன் ஆனந்தமாக நடந்து சென்றார். ஆனால், மற்றவர்கள் அப்படிச் செல்லவில்லை; போகப் போக அவர்கள் சுமையைத் தூக்க முடியாமல் அலுத்துப் போய் விட்டனர்.

அப்போதுதான் அவர்கள் ஈசாப்பின் புத்திசாலித்தனத்தை உணர்ந்தனர்!

ஈசாப் வசித்த ஊரில் பொது மக்கள் குளிப்பதற்காக ஒரு குளம் அமைக்கப்பட்டிருந்தது.

அன்று ஈசாப்பின் எஜமானர், அந்தக் குளத்தில் குளிக்க எண்ணினார். உடனே ஈசாப்பை அழைத்து, அந்தக் குளத்தில் கூட்டம் இருக்கிறதா என்று பார்த்து வரச் சொன்னார். ஈசாப் போய்ப் பார்த்தார்.

அப்போது அந்தக் குளத்தின் வாயிலில் நீளமான ஒரு கல் கிடந்தது.

குளிக்கச் செல்வோரில் சிவர் அதைத் தாண்டிக் கொண்டு சென்றனர்; சிலர் அதில் தடுக்கி விழுந்து, பிறகு எழுந்து சென்றனர். ஆனால், ஒருவர் கூட அதை அப்புறப்படுத்தவில்லை. ஈசாப் இந்தக் காட்சியைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அதே சமயம் அங்கு வந்தார் ஒருவர். அவர் அந்தக் கல்லைத் தூக்கி, ஓர் ஓரத்தில் போட்டு விட்டுக் குளிக்கச் சென்றார்.

ஈசாப் உடனே திரும்பித் தம் எஜமானரிடம் சென்று, “குளத்தில் ஒரே ஒரு மனிதர்தான் குளித்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.

“சரி, போய்க் குளித்து விட்டு வருகிறேன்” என்று எஜமானர் புறப்பட்டுக் குளத்திற்குச் சென்றார்.

அங்கு ஏராளமானவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். உடனே எஜமானருக்கு ஈசாப்பின் மேல் கோபம் வந்து விட்டது. வேகமாக வீட்டுக்குத் திரும்பி வந்தார். ஈசாப்பை அழைத்து, “உனக்கென்ன, கண் பொட்டையா? குளத்தில் எத்தனை பேர் குளிக்கிறார்கள்? ஒரே ஒருவர் குளிப்பதாகக் கூறினாயே!” என்று கேட்டார்.

“ஆம் எஐமானே, அவர் ஒருவர்தான் மனிதர்! வழியிலே கிடந்த கல்லை அப்புறப்படுத்தி, மற்றவர்களை விழாமல் வாப்பாற்றிய அவர் ஒருவர்தான் மனிதர்!” என்றார் ஈசாப்.

தடுக்கி விழ வைக்கும் கல்லைக் கண்டும், பேசாமல் சென்று குளித்துக் கொண்டிருந்தார்களே, அவர்களை மனிதர் என்று சொல்ல விரும்பவில்லை, நம் ஈசாப். இதை அறிந்த எஜமானர் ஈசாப்பின் புத்தி நுட்பத்தைப் பாராட்டினார். இப்படி ஈசாப்பைப் பற்றி எத்தனையோ கதைகள்!

ஈசாப்பின் கருத்துக்கள் சாகா வரம் பெற்றவை. அவை, இந்தக் காலத்துக்கு மட்டுமல்ல: எந்தக் காலத்துக்குமே பயன் தரக் கூடியவை.

ஈசாப்

கிரேக்க அறிஞராகிய ஈசாப்பின் கதைகள் உலகமெல்லாம் பரவும், அக்கதைகளைச் சிறுவர் முதல் பெரியவர் வரை படித்துப் பயனடைவர் என்று அவர் காலத்தில் எவருமே எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி எதிர்பார்த்திருந்தால், அவரது உருவப் படத்தை எத்தனையோ ஓவியர்கள் போட்டி போட்டுக் கொண்டு தீட்டியிருப்பார்கள். புகைப்படம் எடுக்கும் வசதியும் அக்காலத்தில் இல்லை. ஆயினும், அவரது உருவத்தைக் கற்பனைக் கண் கொண்டு பார்த்து வரைந்திருக்கிறார் வெலாஸ் குவிஸ் என்ற ஸ்பெயின் தேசத்து ஓவியர்.