உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

153


யாரென்று புரிந்து கொண்டேன். இருங்கோவேளின் தங்கை தாமரைக்கும் எனக்கும் திருமணம். வேளிர்குடியில் புது உறவு - பாண்டியருக்கு நான் பகைவனாக வேண்டிய சூழ்நிலை; என்னை மறந்து விடுக.

செழியன்"

ஓலையை வாங்கிக் கொண்டே இருங்கோவேள், 'சபாஷ்' என்று செழியன் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டுக் கலகல எனச் சிரிக்கத் தொடங்கினான். அந்தப் பயங்கரமான சிரிப்பு இருட்குகையெங்கும் எதிரொலித்தது.

"செழியா! சரியானபடி ஏமாந்தாய்! இந்த ஓலை பாண்டியன் படையெடுப்பதைத் தடுக்கும். ஆனால் உன் உயிர் போவதைத் தடுக்க இந்த ஓலைக்குச் சக்தி இல்லை. உன் உயிரைப் பணயமாக வைத்துக் கரிகாலனுக்கு அறிவிப்புக் கொடுத்திருக்கிறேன். இழந்த என் நாடுகளைத் திருப்பித்தர வேண்டும். இல்லையேல் செழியனின் உயிர் பறிக்கப்படும். இதுதான் தம்பி, மதிப்பிற்குரிய பூம்புகார் மன்னவனுக்கு இருங்கோவேளின் இறுதி எச்சரிக்கை. ஆகவே, தம்பி! எப்படியோ ஒரு வகையில் உன் உயிர் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது" என்று இடி முழக்கம் செய்தான் இருங்கோவேள்.

செழியனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. தன் உயிரை வைத்து இருபெரும் மன்னர்களை வேடிக்கை காட்டுகிற இருங்கோவேளை அப்படியே கசக்கிப் பிழிந்து விடலாமா என எண்ணி உறுமியவாறு இருங்கோவேள் மீது பாய்ந்தான். இருங்கோவேள், அவனை அலட்சியமாகத் தட்டி வீழ்த்திவிட்டு, வேகமாக வெளியேறினான். தாமரையும் அவனோடு சென்றாள். போகும்போது செழியனை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். உள்ளத்து உணர்ச்சிகளையெல்லாம் நாக்கில் தேக்கிச் செழியன் பலமாக ஒரு முழக்கம் செய்தான். "வாழ்க!" சோழ- பாண்டிய மண்டலம்!" என்ற முழக்கம்தான் அது. அந்த உணர்ச்சிப் பரணியைக் கேட்ட தாமரை, செழியனின் நாட்டுப்பற்றைத் தனக்குத்தானே வியந்து கொண்டாள். கதவு மூடப்பட்டது. மீண்டும் இருள் சூழ்ந்தது. செழியன் இருளில் கிடந்தான்.