உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

கலைஞர் மு. கருணாநிதி


அப்போது அரசர் வருவதை அறிவிக்கும் இசைக் கருவி முழங்கிற்று; அதனைத் தொடர்ந்து யானை மீது பெருவழுதிப் பாண்டியர் அணி வகுப்புகளிடையே வந்து சேர்ந்தார். தளபதியும் போர் மறவர்களும் தலை தாழ்த்தி அரசருக்கு வணக்கம் தெரிவித்தார்கள். பெருவழுதிப் பாண்டியர் வீரர்களை நோக்கினார்.

"அருமை மிகு பாண்டியத்து ஆற்றல் நிறை மறவர்களே! அனைவரையும் வாழ்த்துகிறேன். போர் என்று அழைத்தேன். எங்கே யாருடன் என்று கேட்காமலே கூட ஓடி வந்து கூடி விட்டீர்கள். புறப்படும் வரையில், செய்தி பரவிட வேண்டாமென்று தான் ஒளித்து வைத்தேன். நமது செழியன் எதிரிகள் வசம் சிக்கியிருக்கிறான் என்றே நீங்கள் அறிவீர்கள். ஆனால் அந்த எதிரி யாரென்று அறிய மாட்டீர்கள். வேளிர்குல மன்னன் இருங்கோவேள்தான் செழியனைச் சிறை பிடித்திருக்கிறான். நாடிழந்த அந்த வேந்தன் ஒளிந்திருக்குமிடமோ சோழ மண்டலத்தில் பூம்புகாரை அடுத்து, சில கல் தொலைவிலுள்ள ஒரு காடு, அந்தக் காட்டில்தான் பெரும்படையொன்றையும் கரிகால் சோழனுக்கெதிராக அவன் தயாரித்து வருகிறான். இந்நிலையில் செழியனுக்கு நேர்ந்த கதி யாதென்று விளங்கவில்லை. என் நம்பிக்கையெல்லாம் செழியன் உயிருக்கு ஆபத்து எற்பட்டிருக்காது என்பதேயாகும். நமது படை திடீரென்று இருங்கோவேளையும் அவன் வீரர்களையும் வளைத்துக் கொண்டால் அத்தனை பேரும் செயலிழந்து விடுவார்கள். செழியனின் உயிரும் காப்பாற்றப்படும். ஆகவே இந்தப் படையெடுப்பு மிகத் தந்திரமாக நடைபெற வேண்டும். வெற்றி கிடைத்தும் செழியன் உயிருடன் கிடைக்க வில்லையென்றால் அது மாபெரும் தோல்வியே ஆகும். அதனால் ஆர்ப்பாட்டம் அதிகமின்றி இந்தப் போராட்டத்தில் குதியுங்கள். தளபதி நெடுமாறனிடம் போர் முறை பற்றிய விளக்கமனைத்தும் அறிவித்திருக்கிறேன். அவருக்குக் கட்டுப்பட்டு வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள்! வாழ்க பாண்டிய மண்டலம்!"

பெருவழுதிப் பாண்டியரின் உரை கேட்டு நின்ற வீரர்கள் "வாழ்க மன்னர்!" என முழங்கினர்.

தளபதி நெடுமாறன், அரசரிடம் விடை பெற்றுப் புறப்பட்டான். தளபதியைத் தொடர்ந்து வீரர்களும் முரசொலித்துக் கிளம்பினர். போர் வெறியால் உந்தப்பட்ட அவர்கள் மிக விரைவில் தலைநகரைத் தாண்டிப் பூம்புகார் செல்லும் பாட்டையில் நுழைந்தனர்.

சோழ மண்டலத்தில் நுழையாமலேயே அந்த நாட்டைச் சுற்றிக் கொண்டு இருங்கோவேள் வாழும் காட்டில் பிரவேசிக்க வேண்டு மென்று அரசர், தளபதிக்கு உணர்த்தியிருந்தார். அந்த அறிவுரைகளைப் பின்பற்றியே தளபதி நெடுமாறன் வழி வகுத்துச் சென்று கொண்டிருந்தான்.