உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/பசுவும் கன்றும்

விக்கிமூலம் இலிருந்து

12. பசுவும் கன்றும்

தோட்டத்தில் மேயுது,
     வெள்ளைப் பசு—அங்கே
துள்ளிக் குதிக்குது,
     கன்றுக் குட்டி. 1

அம்மா என்குது,
     வெள்ளைப் பசு—உடன்
அண்டையில் ஓடுது,
     கன்றுக் குட்டி. 2

நாவால் நக்குது,
     வெள்ளைப் பசு—பாலை
நன்றாய்க் குடிக்குது,
     கன்றுக் குட்டி. 3

முத்தம் கொடுக்குது,
     வெள்ளைப் பசு—மடி
முட்டிக் குடிக்குது,
     கன்றுக் குட்டி. 4