உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/வசந்தம்

விக்கிமூலம் இலிருந்து

18. வசந்தம்

மின்னி மேகம் பரவுது ;
      மெல்ல மெல்லத் துளிக்குது;
என்ன சொல்லித் துளிக்குதென்று
      இயம்பு கின்றேன், கேளம்மா! 1

‘மண்ணில் கொஞ்ச நாட்களாய்
      மறைந்து றங்கும் செடிகளே!
கண் மலர்ந்து வாருங்கள்;
      காலை யாச்சு‘ தென்குது. 2

‘பட்டுடுத்து வாருங்கள்;
      பணிகள் பூண்டு வாருங்கள்;
பொட்ட ணிந்து சீக்கிரம்
      புறப்படுங்கள்‘ என்குது. 3

‘வாசச் செப்பைத் திறவுங்கள்:
வாரி யெங்கும் வீசுங்கள்
ஈசன் பாத பூசனைக்கு
எழுந்திருங்கள்’ என்குது. 4


‘வாட்ட மெல்லாம் நீங்கவே
வசந்த காலம் வந்தது;
மீட்டும் நன்மை காணலாம்
விரைந்தெ ழுங்கள்’ என்குது.