உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

95

செய்கின்றது; ஐம்பொறிகளையுந் தம் வயப்படுத்தி யிருப்பவர் களின் மனமானது பிறன் மனையாளைத் தழுவுதற்கு

ஒருப்படமாட்டாது.

சார்ங்கரவன் : மற்றை நிகழ்ச்சிகளில் அழுந்தியிருத்த லால் முன் நடந்ததை மறந்து போயிருக்கும் நீர் எவ்வாறு பழிக்கு அஞ்சுவீர்?

அரசன் : இவ்விரண்டில் இங்கே எஃதுயர்ந்தது? எது தாழ்ந்தது? என்று தங்களைத்தான் கேட்டுக் கொள்ளு கிறேன். நான் மறந்திருந்தாலுமிருக்கலாம், அல்லது இம்மாதரே பொய்கூறி யிருந்தாலு மிருக்கலாம். இவ்வையப் பாட்டில், மனையாளாயின் அவளை நீக்குவது நன்றோ, அல்லது பிறன்மனையாளாயின் அவளைச் சேர்ந்து குற்றம் அடைதல்

நன்றோ?

புரோகிதர்: (ஆழநினைந்து) அப்படியானால், தாங்கள் இவ்வாறு செய்யுங்கள்.

அரசன் : நல்லது; தெரிவியுங்கள்.

புரோகிதர் : பிள்ளைப்பேறு வரையில் இந்த அம்மையார் என் வீட்டில் இருக்கட்டும்; நான் இதனை ஏன் சொல்லுகிறேன் என்று கேட்பீர்களானால், மன்னர் மன்னனாயிருக்கும் ஒரு புதல்வனை முதன்முதல் தாங்கள் பெறுவீர்களென்று முன்னொருகால் முனிவர்களால் வாழ்த்தப்பட்டிருக் கின்றீர்கள். இம் முனிவர் மகளார் வயிற்றிற் பிறக்கும் அம் மகன் அத்தகைய அரசடையாளங்கள் உடையனாயிருந்தால், இம் மங்கையாரைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு உவளகத்தில் வைக்கலாம். அப்படி நேராவிட்டால், தம் தந்தை வீட்டுக்குப் போய்விடுதலே அவர் பின்பற்றற் பாலதொரு முறையாகும்.

அரசன் : குரவர் விரும்புகிறபடியே செய்க.

புரோகிதர் : மகளே! என் பின்னே வா.

சகுந்தலை : ஓ பெருமை தங்கிய பூதேவி! நீ வெடித்து என்னை ஏற்றுக்கொள். (அழுதுகொண்டு புரோகிதரொடு போகின்றாள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/126&oldid=1577185" இலிருந்து மீள்விக்கப்பட்டது