உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

சாந்தியின் சிகரம்

இதற்கோர் ப்ரதி உதவியை, நீ கட்டாயம் செய்தே தீர வேண்டும். அதற்கான வாக்குறுதியைக் கொடுத்தாக வேண்டும்.

கமல: ப்ரதி உதவியையா! உனக்குக் கூட உதவியைச் செய்யாமல், யாருக்கப்பா செய்யப் போகிறேன். உன் நன்மையை உத்தேசித்தல்லவா, நான் இத்தகைய அசட்டுக் காரியத்தைச் செய்து விட்டேன்!… கட்டாயம் உனக்கு வேண்டியதைச் செய்கிறேன்…

ஸ்ரீதர:- அம்மா ! கடவுள் மீது ஆணையாகச் சொல்கிறேன். வாக்குக் கொடுத்ததை மாற்றக் கூடாது. தெரிந்ததா! அம்மா! நீ இது காறும் செய்து வரும் பிடிவாதத்தை விட்டு, முதலில் தம்பிக்கு அவன் இஷ்டப்படியே கல்யாணத்தை, நானே நின்று நடத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். அவனுடைய இன்றைய அதிர்ச்சியைத் தீர்க்க, இதொரு சரியான மருந்தாகும்.

கமல:- ஐயையோ! அப்படி, இப்படிப் பேசி என்னை மடக்கி, இந்த விஷயத்திற்குக் கொண்டு வந்து விட்டாயே தம்பீ!…

ஸ்ரீத:- அம்மா! வீணாகப் பேசி, காபுரா அடையாதே! காலம் போகிற போக்கை நீ மறந்து விடுகிறாய்! எத்தனையோ முக்யமான காரியங்களை எல்லாம், கடமையை எல்லாம், மனிதர்கள் கை விட்டு விடுகிறார்கள். நீ என்னமோ இந்த கல்யாணத்தைப் பற்றி ப்ரமாதப்படுத்துகிறாய். கடவுளறிய என் மனத்தில், இந்த நிமிடம் வரையில், இந்தக் கல்யாண இச்சையே உதயமாகவில்லை. என்னைப் பற்றி அவதூறாக, உன்னிடம் யார் யாரோ பொய்ப் புராணங்களைக் கொட்டியளப்பதை நான அறியாமலில்லை. அதைப் பற்றி, நீ சற்றும் நம்பாதே! கடவுள் சித்தப்படி, எனக்கு எப்போது கல்யாணத்தில் மனது செல்கிறதோ, அன்றே நான் உன்னிஷ்டப்படிச் செய்து கொண்டு, உன்னை மகிழ்விக்கிறேன்.