போய் விட்டது. சினேகிதர்களுடன் வெளியிலேயே போய் விட்டான்.
கமலவேணியின் நிலைமைதான், திருடனுக்குத் தேள் கொட்டியது போல் ஆகி விட்டது. ரிஜிஸ்தர் ஆகாத கடிதத்தை வைத்துக் கொண்டு, அவன் என்ன செய்ய முடியும் என்கிற ஞானம் இல்லாமல், ஏதேதோ அசட்டு யோசனையில், விபரீதமான காரியத்தைச் செய்து, நானே பெருத்த குழப்பத்தைத் தேடிக் கொண்டேனே! வெளியில் சென்ற ஸ்ரீதான் இன்னும் வரவில்லை. தாமோதரனும் என்ன செய்கிறானோ! எங்கு சென்றானோ தெரியவில்லையே! என்று கவலையே வடிவாய், ஆகாரமும் பிடிக்காமல், அயர்ந்து போய் படுத்திருந்தாள்.
அச்சமயம் தாமோதரன் மெல்ல தன் தாயாரிடம் வந்தான்; பெத்த தாயின் பாசம் உச்சத்தை எட்ட, எழுந்து உட்கார்ந்து “தம்பீ ! சாப்பிட்டாயா! இன்னும் உன் பயம் தெளியவில்லையா! முகம் ஏதோ மாதிரி இருக்கிறது!” என்று பரிவுடன் கேட்டாள்.
தாமோ:- அம்மா! நான் தனிமையில் உன்னிடம் பேசுவதற்காக வந்தேன்—என்று சொல்லும் போது, கமலவேணியம்மாள் கிழித்துப் போட்டிருந்த காகிதத் துண்டுகள் அவன் கண்களில் சடக்கென்று பட்டு விட்டதுதான் தாமதம். உடனே பாய்ந்தெழுந்து சென்று, காகிதத் துண்டங்களைச் சேர்த்துக் கொண்டு வந்து, தாயாரின் முன் காட்டி, வெறிக்க வெறிக்க பார்த்துக் கோபக்கனல் ஜ்வலிக்க, ‘அம்மா! இது நீ செய்த காரியந்தானே?’ என்று பெருத்த ஆத்திரத்துடன் கேட்டான்.
முதலில் சில வினாடிகள் கமலவேணி ப்ரமித்து விட்டாள். பிறகு சமாளித்துக் கொண்டு, “தம்பீ! பெத்த தாயின் கடமைக்குள் பட்ட சகல காரியத்தையும் செய்ய எனக்கு அதிகாரமுண்டு என்கிற முறையில், இக்கடிதத்தை நானே உன் பெட்டியிலிருந்து எடுத்துக் கிழித்தெறிந்தேன்;