10
இலக்கிய மரபு
பழைய வேழப் பத்து, குயிற் பத்து முதலியன போலவே, பிற்காலத்தில் இசையோடு கூடிய பாட்டுக்கள் பல ஏற்பட்டன. அவை கிளிப் பாட்டு, நலங்குப் பாட்டு, பல்லிப் பாட்டு, கும்மிப் பாட்டு முதலிய பெயர்களால் வழங்கலாயின. அவற்றை யெல்லாம் பாரதியார் கலைச் செல்வமாகப் பாராட்டியுள்ளார்.*
பொருள் பற்றிய பாகுபாடு
ஒரு நூல் உணர்த்தும் பொருள்பற்றி அது இன்ன வகை என்று வழங்கும் வழக்கு எல்லா மொழியாரிடத்தும். பெரும்பான்மையாக உள்ளது. தமிழிலக்கியத்திலும் தொன்று தொட்டு வழங்கும் பாகுபாடுகள் சில உள்ளன.
அகம்: புறம்
உள்ளத்தளவில் உணரப்படுவதாகிய காதல் பற்றிய பாட்டுக்கள் அகம் என்றும், புறத்தார்க்கும் புலனாகும் வீரம் கொடை முதலியன பற்றிய பாட்டுக்கள் புறம் என்றும் தமிழ்ச் சான்றோர் கொண்டிருந்தனர்.
காதல் பற்றிய பாட்டுக்களிலும், காதலர் இன்னார் என்று அறிய முடியாதவாறு, இயற் பெயரோ இனப் பெயர் முதலியனவோ இல்லாமல் அமைந்த பாட்டுக்களே அகம் என்றும், அவ்வாறு பொதுவாக அமையாத காதல் பாட்டுக்கள் புறம் என்றும் கொள்ளப்பட்டன.
- 'கும்மிப்பாட்டு, பல்லிப்பாட்டு, கிளிப்பாட்டு, நலங்குப்பாட்டு, பள்ளியறைப் பாட்டு, அம்மானைப் பாட்டு. தாலாட்டுப்பாட்டு முதலிய பெண்களுடைய பாட்டெல்லாம் மிகவும் இன்பமான வர்ணமிட்டு, தமிழர்களுடைய தாய் அக்காள் தங்கை காதலி முதலிய இவர்கள் பாடும் பாட்டு மறக்கக் கூடிய இன்பமா? ஞாபகம் இல்லையா ? தமிழ்ப் பெண்களின் பாட்டைக் கையெடுத்து வணங்குகிறோம்." -
பாரதியார், கட்டுரைகள், பாட்டு (ஸங்கீத விஷயம்).