உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழ் ஏணி

41

குடிப்படைத் தலைவர்களுக்கு ஆணையிடல், கருவூலத்தையும், நாட்டுச் செலாவணியையும் கையாளல், வரி விதித்தல் ஆகிய சிறப்புரிமைகள் அவனுக்கு அளிக்கப்பட்டன.

படைத் துறையில், இச்சமயம் கணக்குகள் சீர் குலைந்திருந்தன. படைச் சம்பளத்தில், பல நாள் தவணைப் பாக்கிகள் இருந்தன. படை வீரர் பலவிடங்களில் கிளர்ச்சிகள் செய்தனர். எங்கும், அமளி குமளியாக இருந்தது. ஹைதர் கிளர்ச்சிக்காரரை அடக்கினான். வேண்டாத படை வீரரையும், படைத் துறைப் பணியாளரையும் கிளர்ச்சியைச் சாக்கிட்டே குறைத்தான். கணக்குகளை நேரடியாகச் சரி பார்த்து, எரிகிற வீட்டில் ஆதாயம் தேட முற்பட்ட கணக்குகளை ஒழித்தான். நேர்மையான சம்பளப் பாக்கியில் ஒரு பகுதி கொடுத்து, மறு பகுதியை எதிரி நாட்டில் கொள்ளை மூலம் சரி செய்து கொள்ளும் உரிமை அளித்தான். இவ்வகையில் படைத் துறையில் அமைதி ஏற்பட்டது.

மராட்டியருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை, ஹைதர் வேண்டுமென்றே கொடுக்காமல் கடத்தி வந்ததுடன், அதற்கீடாக அளிக்கப்பட்ட நிலப் பகுதியையும் கைக் கொண்டான். இச் செயல்களால் சீற்றங் கொண்ட பேஷ்வா, 1759-ல் கோபால் ராவ் ஹரி என்ற தம் படைத் தலைவனைப் பெரும் படையுடன் மைசூர் மீது ஏவினான். கடல் போன்ற மராட்டியப் படைகள், மைசூர் முழுவதும் பறந்து ஆட்கொண்டன. பங்களூர் நகரத்தையும், கோபால் ராவ் முற்றுகையிடத் தொடங்கினான். இச்சமயத்துக்கே காத்திருந்த ஹைதர், லத்ப் அலி பேக் என்ற படைத் தலைவனை அனுப்பி, மராட்டியரின் பின்னணியிலிருந்த மைசூர்ச் சென்னப் பட்டணத்தைக் கைக் கொண்டான். இதனால், பங்களூர் முற்றுகை கை விடப்பட வேண்டியதாயிற்று. இதன் பின்னும், நேரடி களப் போரில் இறங்க