உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

“பெருந்தன்மை மிக்க வீர மைந்தனே! உன் வாள் வலியின்றி எமக்குப் பாதுகாப்பில்லை, புகலிடமில்லை. உன் வீரக் கரமின்றி, இங்கே ஆட்சியும் செல்லாது, வாழ்வில் அமைதியும் நில்லாது. ஆகவே விரைந்து வந்து, எம் வீர மைந்தனாகும் பேற்றையும், ஆட்சிப் பொறுப்பையும் நேரடியாக ஏற்று, எமக்கும், நாட்டு மக்களுக்கும் நல் வாழ்வளிக்கக் கோருகிறோம்” என்று அரச இலச்சினையிட்ட அழைப்பிதழ் ஹைதரை நாடி வந்தது.

ஹைதர், தன் வீர வாழ்வில் முதல் தடவையாக, தன் வீரப் போக்கில் தயங்கினான். “கேளாதே வந்த இவ்வரும் பெரும் பொறுப்பை ஏற்பதா? மறுப்பதா?” என்ற பிரச்சினை எழுந்தது. ஏற்க அவன் விரும்பவில்லை; ஆனாலும், மறுக்க அவன் துணியவில்லை. மக்கள் அனாதை நிலையை அவன் எண்ணினான். மன்னன் அகதி போல், அல்லலுறுவதைக் கண்டு, அவன் உள்ளம் உருகினான். அவன் கண் முன், தன் நண்பனான வீர அமைச்சன் நஞ்சி ராஜன் வீழ்ச்சிப் படலம் நாடகத் திரைக் காட்சி போல் இயங்கிற்று. இவற்றையெல்லாம் சிந்தித்த பின், இறுதியில் அப்பொறுப்பை ஏற்பதென்று அவன் துணிந்தான்.

துணிவுக்கு ஆதாரமான அக்கடிதத்தை அவன் தன் மூலப் பத்திரமாகப் பத்திரப்படுத்தினான்.

குந்தி ராவிடம் இன்னும் ஏழாயிரம் குதிரை வீரர், பன்னிரண்டாயிரம் காலாள் வீரர், மானுவெல் என்ற வெள்ளையன் தலைமையில் 800 ஆங்கிலப் படை வீரர், பத்துப் பன்னிரண்டு பீரங்கிகள் ஆகியவை இருந்தன. ஆனால் அகப் படையாகிய வீரம் இல்லாத போது, புறப் படைகளால் யாது பலன்? சூழ்ச்சியிலே நம்பிக்கை வைத்த அவன், தன் சூழ்ச்சிக் கோட்டை இடிந்ததும், அச்சத்துக்கு ஆளாகி,