உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

களையும், சுரா மாகாணத்திலுள்ள மற்றக் குறுநில மன்னரையும் கீழடக்கித் திறை வசூலித்து, மைசூர்த் தனியரசெல்லை தாண்டிப் பேரரசை மேலும் வளர்த்துக் கொண்டான். இவற்றால், ஆங்கிலப் போரில் இழந்த செல்வத்துக்கு அவன் பன்மடங்கு ஈடு செய்து, கருவூலத்தை வளப்படுத்திக் கொண்டான்.

இச்செயல்கள், மீண்டும் பேஷ்வாவின் கடுஞ்சினத்தைக் கிளறும் என்பதை ஹைதர் எதிர்பார்த்தே யிருந்தான். ஆகவே, 1769-ம் ஆண்டு ஒப்பந்தப்படி, ஆங்கிலேயர்களை உதவிக்கு வரும்படி அவன் அழைப்பு விடுத்தபின், தானே படையெடுப்புக்கு முன்னேற்பாடுகள் செய்தான். ஆனால், அவன் எதிர்ப்பார்த்தபடி ஆங்கிலேயர் உதவ முன் வரவில்லை. கரடியின் உதவியை நம்பி, மத யானையைக் கிளறி விட்ட கதையாயிற்று. மராட்டியர் தாக்குதலின் முழு வேகத்தையும், ஹைதர் ஒருவனே ஏற்க வேண்டியதாயிற்று. இப்பொறுப்பு, தன் தனி ஆற்றலுக்கு மேற்பட்டதென்று கண்ட ஹைதர், இணக்கப் பேச்சுப் பேச முற்பட்டான். ஆனால், பேஷ்வா ஒரு கோடி வெள்ளி கேட்டதால், பேச்சு முறிவுற்றது. இதன் பின், எதிரியை முன்னே விட்டு, ஹைதர் தலைநகரை நோக்கிப் படிப்படியாகப் பின்னேறிச் சென்றான்.

மைசூரில் பெரும் பகுதியும், மராட்டியர் படைகள் வசமாயின. கோட்டைகள் பல பிடிபட்டன. பங்களூருக்கு வடமேற்கிலுள்ள நிஜகல் கோட்டையில்தான், ஹைதரின் எதிர்ப்பு நடவடிக்கை மும்முரமாயிற்று. மூன்று மாத முற்றுகையின் பின்னும், அதன் காவல் சிறிதும் தளரவில்லை. ஆனால், இச்சமயம் சித்தல துருக்கத் தலைவன், நம்பிக்கை மோசம் செய்து, எதிரிக்கு உதவினான். ஆண்மை மிக்க பேடர் படையின் தலைமையில், அவன் துணிகரமாக