10. கம்யூனிஸ்ட் அறிக்கையைக்
தமிழில் வெளியிட்டார்
1931 மே திங்கள் முதல் 1931 ஆகஸ்ட் வரை, சமதர்மக் கொள்கையைப் பரப்புதல், தன்மான இயக்கத்தின் தந்தையாகிய பெரியாரின் சீரிய கருத்தாக நடைபெற்றது. 1931 ஆகஸ்டில், விருதுநகரில் நடந்த மூன்றாவது மாகாண சுயமரியாதை வாலிபர் மாநாட்டில், இயக்கத்தின் இலட்சியங்களில் ஒன்றாக, சமதர்மக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அம்மாநாட்டின் முதல் முடிவைப் பார்ப்போம்.
‘சமதர்மத் தத்துவமும், பொதுவுடைமைக் கொள்கையும், நாட்டில் ஓங்க வேண்டும் என்பதே நமது இலட்சியமாயிருக்கிறபடியால், விதி, கடவுள் செயல் என்பன போன்ற உணர்ச்சிகள், மக்கள் மனதிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.’
இம்முடிவின் முற்பகுதி, இலட்சியத்தை அறிவிக்கிறது; திட்டவட்டமாகவே அறிவிக்கிறது. பிற்பகுதி, அந்த இலட்சியம் நிறைவேறாதபடி, குறுக்கே நிற்கும் தடைக் கற்களைக் காட்டி, அவற்றை ஒழிக்கச் சொல்லுகிறது.
போதிய சூடேற்றாமல், அரிசியை உலையில் இடுவது வீண் முயற்சி. எவ்வளவு நீண்ட காலம், சிறுகச் சிறுக, நான்கு அரிசிகளாகப் போட்டுப் பார்த்தாலும், ஒரு பருக்கைச் சோறும் கிடைக்காது. அத்தகைய முயற்சியும் பாழ், அதில் போடும் பொருளும் பாழ்.
விதி, கடவுள் செயல் என்னும் நம்பிக்கையுள்ள வரை, பொது மக்களிடம் சமதர்ம உணர்வில் சூடு பிடிக்காது. சூடு பிடிக்காத வரை, அது ‘நல்லவர்களின் நம்பிக்கை’யாக மட்டுமே நிற்கும். ‘வல்லவர்களின் பயனுள்ள செயற்பாடுகளாக’ மாறாது. இதையுணர்ந்ததால், தன்மான இயக்க வாலிபர்கள், போய்ச் சேர வேண்டிய இடத்தையும் காட்டி, வழியில் ஒழிக்கப்பட வேண்டியவற்றையும் தெளிவாகக் காட்டினார்கள்.